என் ஆயுள் நீயே 68
இல்லம் முழுவதும் சந்தோஷம் ததும்பியது.
உதயன் அஷ்மிதா திருமண மகிழ்வை இரட்டிப்பாக்கியது நனியிதழ் தாய்மை அடைந்த செய்தி.
கொண்டாட்டத்திற்கும், கலகல பேச்சுக்கும் குறைவின்றி நேரம் கழிந்திட, இரவு உணவை அமர்க்களப்படுத்தினர் பெண்கள்.
விருந்து உணவு என்பதால் குமரி, ஜெயந்தன் அழைக்கப்பட்டிருக்க… வந்த குமரி விஷயம் கேள்விப்பட்டதும் தனுவை அப்பட்டமாக முறைத்தார். எல்லோரும் இருக்க தான் பார்க்கிறோம் என்கிற எண்ணம் கூட இல்லை.
“ரொம்ப சந்தோஷம் டா” என்று ஜெயந்தன் நனியின் தலையில் கை வைத்து ஆசீர்வதிக்க… குமரி சிறு புன்னகையை கூட காட்டவில்லை.
தனு இன்பாவின் பின்னால் தன்னை மறைத்துக்கொள்ள, இன்பா மனைவியின் செய்கையையும் குமரியின் பார்வையையும் தான் மாற்றி மாற்றிப் பார்த்தான்.
இரவு உணவு முடித்து நனியிதழும் பிரணவ்வும் கிளம்பிட, அவர்களை வழியனுப்பிட அனைவரும் வெளியில் செல்ல, அவர்களுடன் சென்ற தனுவின் கையைப் பிடித்து நிறுத்தியிருந்தார் குமரி.
“என்னம்மா?” தனுவிற்கு அனைவரும் இருக்க குமரி எதுவும் பேசி வைத்திடுவாரோ எனும் பயம். வாயிலை எட்டிப் பார்த்தவள்,
“இப்போ எதுவும் பேசிடாதம்மா” என்றாள்.
“என்ன பேசக்கூடாது தனு?” என்ற குமரியின் முகத்தில் அப்படியொரு ஆத்திரம். ஆத்திரம் கண்ணை மறைக்க, யார் இருக்கிறார்கள், எங்கு நிற்கிறோம் என்பதையெல்லாம் அவர் பொருட்படுத்தவே இல்லை. தன் மனதிலிருக்கும் எல்லாவற்றையும் வெளியில் கொட்டியிருந்தார்.
“அம்மா பிளீஸ்… எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க. அதை கெடுத்துடாத” என்று தனு கிட்டத்தட்ட தன் அன்னையிடம் இரைஞ்சினாள்.
“எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க. ஆனால் நான் இல்லையே தனு. உன்னால எனக்கு சந்தோஷம் கிடைக்கும் நினைச்சேன். ஆனால்” என்றவர் பேச்சை நிறுத்துவது போலில்லை.
வெளியில் சென்றிருந்த அனைவரும் உள்ளே நுழைந்திட, அவர்களையெல்லாம் குமரி கவனத்திலே எடுக்கவில்லை.
“எத்தனை தரம் சொன்னேன்… நீதான் முதல்ல உண்டாகணும்ன்னு. இப்போ பார்த்தியா நனியிதழ் முந்திக்கிட்டாள்” என்றார்.
அவர் சொல்லியதில் அனைவரும் இதென்ன போட்டி போடும் விஷயமா என்று அதிர்ந்து பார்த்தனர். உண்மையில் அவர் பேசிய பொருளில் யாருக்கும் என்ன பதில் கொடுப்பதென்றே தெரியவில்லை.
“உன்னோடதானே அவளுக்கும் கல்யாணம் ஆச்சு. அவள் குழந்தை பெத்துக்கப் போறா. நீ” என்றவர், “அண்ணனுக்கு முன்ன கல்யாணம் பண்ணறதுக்கே மாட்டேன்னு அந்த குதி குதிச்சானே… குழந்தையாவது அண்ணாக்கு அப்புறம் பெத்துக்கலாம் அப்படின்னு உன்னை எதும் தள்ளி வச்சிருக்கானா?” எனக் கேட்க,
“அம்மா” என்று தனு தன் காதுகளை மூடிக்கொண்டு, தரையில் அமர்ந்திட, “குமரி” என்று கர்ஜித்து அருகில் வந்த ஜெயந்தன் அடிக்க கையை ஓங்கிவிட்டார்.
இதையே தான் கங்காவும் இன்பாவிடம் கேட்டிருந்தார். பொருள் ஒன்று தான். ஆனால் கேட்கப்படும் விதமென்று ஒன்றுள்ளதே! கங்கா மகனின் மீதான அக்கறையில் நாசூக்காகக் கேட்ட விஷயத்தை, குமரி மகளிடம் அனைவரின் முன்பும் கேட்ட விதம், கொண்ட வார்த்தைகள் அனைவருக்கும் முகம் சுளிக்க வைத்திட்டது. எல்லோர் முன்பும் கேட்கும் பேச்சா இது. சொந்த உறவுகளாகவே இருந்தாலும் சில விஷயங்கள் பொதுவாக பேசுவது முறையாகாதே.
பின் மதியத்தில் கங்காவுடன் இன்பா பேசிக்கொண்டிருந்ததில் இறுதியை மட்டுமே கேட்டிருந்த உதயனுக்கு முழுப்பேச்சு இதுவாகத்தான் இருந்திருக்குமென்ற அனுமானம் கங்கா மற்றும் இன்பாவின் பார்வை பரிமாற்றத்தில் விளங்கிக்கொள்ள, தன்னால் தனது நிலையிலிருந்து இறங்கி குணம் மாற பேசிடவோ, செய்திடவோ முடியாதென்ற தீர்க்கத்தில், இனியும் இன்பாவை அமைதிப்படுத்திப் பொறுத்துக்கொள்ளச் சொல்வது வேணென நினைத்தான்.
“சும்மா குதிக்காதீங்க” என்று கணவர் ஓங்கிய கையை தடுத்து பிடித்த குமரி, “இப்போ இந்த வீட்டுக்கு அதுதான் மூத்த வாரிசு. இனி உங்க பொண்ணுக்கு குழந்தை பிறந்தா அவள் புருஷன் மாதிரி அதுவும் இந்த வீட்டுக்கு இரண்டாம் பட்சம் தான்” என்று சொல்ல…
இன்பா தட்டிவிட்டதில் அங்கிருந்த கண்ணாடி டீபாய் தூள்தூளாக சிதறியிருந்தது.
உதயன் அமைதியாக தன்னுடைய அறைக்குச் சென்றுவிட்டான். மற்ற விஷயங்கள் என்றால் எதுவும் பேசலாம். அவரின் கூற்று தவறென்று சொல்லலாம். ஆனால் இதற்கு என்னவென்று விளக்கம் கொடுத்து புரிய வைத்திட முடியும். அதுவும் பிள்ளைகள் பிறந்து வளர்ந்து ஆளாகி நிற்கும் இந்த கணம் வரை உடனிருந்து பார்ப்பவருக்குத் தெரியாதா… எந்த இடத்தில் பிள்ளைகளிடம் வேற்றுமைகளை காண்பித்தார்கள் என்று. இதனையெல்லாம் பேசிடவே அவனுக்குப் பிடிக்கவில்லை. அப்படி பேசிடவும் அவனுக்கு வராது.
அதிலும் அன்று வீட்டு முன் வைத்து குமரி அத்தனை பேசியிருக்கவே, அத்தை உறவு வேண்டுமென்று எவ்வித ஈகோவும் கொள்ளாது தானாக இறங்கிச்சென்று ஓரளவிற்கு அவரின் மனசு வேறு விதமாக எடுத்துக்கொள்ளக் கூடாதென்று பார்த்து பார்த்து பேசியிருக்க… அதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று காட்டிவிட்டாரே.
அவருக்கு உறவுகளைவிட அவரின் எண்ணம் பெரிதாக போய்விட்டதா?
முதலில், இரண்டில் என்று அதில் என்ன உள்ளது?
இதற்குமேல் அவரிடம் பேசினால் அது தங்களின் சொல்லுக்கு மதிப்பில்லாத செயலென்று ஒதுங்கி வந்திருந்தான். உறவென்றால் இழுத்துப் பிடிக்க வேண்டுமென்று இன்பாவுக்கு வலியுறுத்தும் உதயன், இன்றைய குமரியின் பேச்சால் அவரை ஒதுக்கிவிட்டான். இனி அவனிடத்தில் குமரிக்கென்று இடமில்லை.
நனியும் இந்த வீட்டுப்பிள்ளை. அவர் கண் பார்க்க வளர்ந்தவள். அவளும் மகள் போன்றவள் தானே! தாங்கள் தனுவை பிரித்து பார்க்காத போது, அவருக்கு மட்டும் இப்படி வேற்றுமை காணும் குணம் எப்படி வந்தது? சந்தோஷம் கொள்ளவில்லை என்றாலும் இப்படி மனதில் பொறாமை கொண்டிருக்க வேண்டாமே எனும் ஆதங்கம் உதயனிடம்.
ஒத்துவரவில்லை என்றால் மொத்தமாக ஒதுக்கும் ரகம் உதயன். பாசத்தில் விட்டுக் கொடுத்து செல்லும் உதயன், இன்று விட்டுகொடுத்தலுக்கான மதிப்பு இல்லாதவரிடம் அதனின் தன்மையை இழக்க விரும்பவில்லை.
உதயன் வருத்தம் கொண்டு அங்கிருந்து சென்றதில், ஏற்கனவே குமரியின் மீது அடக்கி வைத்திருந்த கோபத்தை எல்லாம் மொத்தமாகக் காட்டியிருந்தான் இன்பா.
பெரியவர்கள் அனைவருக்கும் குமரியின் முகம் பார்க்கக்கூட வெறுப்பாக இருந்தது.
“மாமா தயவுசெஞ்சு அவங்களை கூட்டிட்டுப் போயிடுங்க… இனி எப்பவும் அவங்க இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது” என்றான் இன்பா.
குமரி அதிர்ந்து அனைவரின் முகத்தையும் பார்க்க, இன்பா சொல்வதற்கு கட்டுப்படுவதைப் போல அனைவரும் அமைதியாக நின்றிருந்தனர்.
“எல்லாரும் அமைதியா இருக்கிறதைப் பார்த்தா… இவன் சொல்றதுக்கு சரிங்கிற மாதிரி இருக்கு” என்று குமரி கூற,
“இதிலே உங்களுக்குப் புரிஞ்சியிருக்குமே… இங்க யாரும் இரண்டாம் பட்சமில்லைன்னு. சொல்றது எழிலா இருந்தாலும், சரியானது அப்படின்னா, எல்லாரும் மதிப்புக் கொடுக்கத்தான் செய்வாங்க. உங்களை மாதிரி வேற்றுமை பார்க்கிறது இல்லை” என்றான் இன்பா.
“உங்க பிரச்சினை என்ன? எல்லாத்துக்கும் முன்ன இருக்கணும் அதானே? அதுக்காகத்தான அண்ணாவை மருமகனாக்கனும் நினைச்சீங்க. அது நடக்கலன்னு ஆத்திரத்தில் என்னென்னவோ பேசினீங்க. அதெல்லாம் எதோ வருத்தம், ஆதங்கம் அப்படின்னு நினைச்சா… இப்போதானே உங்க மனசுல இருக்க பொறாமை குணம் தெரிய வருது. தனுவை இந்த வீட்டுப் பிள்ளையா தான் எல்லாரும் பாக்குறாங்க. ஆனால் நீங்கதான், உங்க மகள், உங்க மகள் கல்யாணம், உங்க மகள் நீங்க பிறந்த வீட்டை ஆளனும், உங்க மகள் சொல் தான் இங்க சட்டமா இருக்கணும் அப்படின்னு எல்லாத்திலும் உங்க மகள் உங்க மகள்ன்னு பாரபட்சம் பார்த்திருக்கீங்க” என்றான்.
குமரி தன் எண்ணத்தை பிட்டு பிட்டு வைக்கும் இன்பாவின் கூற்றில் ஆடிப்போய் விட்டார்.
இப்படி தன் மனதை கவனித்து வைத்திருப்பானென்று அவர் நினைக்கவில்லை.
“என்ன உங்க எண்ணத்தை சரியா சொல்றேனா?” என்ற இன்பா, “இதெல்லாம் கூட ஓகே. ஆனால் இப்போ பேசினீங்க பாருங்க… நீங்களா இப்படின்னு தோனிருச்சு. மகள் நல்லாயிருக்காளா… அவளுக்கு நல்லது நடக்ககுதான்னு அக்கறையில் பேசுறது வேற. உங்க ஆசைக்கு தீனிப் போட நினைச்சு அவளுக்கு அழுத்தம் கொடுக்கிறது வேற. தான் தான் அப்படிங்கிற எண்ணம் இருக்கவங்கலாம்” என நிறுத்தி, “அதை நான் ஏன் சொல்லனும்? உங்களுக்கே நல்லாத் தெரியுமே!” என்றான்.
“என்னங்க…”
இன்பாவின் வார்த்தைகளின் சூடு தாங்காது குமரி கணவரை பார்க்க…
“இது உனக்கு தேவைதான். நான் அன்னைக்கே சொன்னனே… உன்னை நம்ப முடியாது. நீ எப்போ எப்படி மாறி பேசுவன்னு. இதுதான் உன் குணம் அப்படின்னு காட்டிட்டல நீ. ஆனால் இத்தனை வருஷம் இப்படியொரு எண்ணத்தை மனசுல வச்சிக்கிட்டு உன்னால எப்படி எங்களோட வாழ முடிஞ்சுது?” எனக் கேட்டவர், “உன்னை கட்டினதுக்கு நான் என்னவும் அனுபவிச்சிக்கிறேன். என் பொண்ணு நல்லா வாழனும் அப்படின்னா இனி உன் நிழல் கூட அவள் மேல படக்கூடாது” என்றார் ஜெயந்தன்.
“அவள் என் பொண்ணுங்க. அவள் நல்லாயிருக்கனும்…” குமரி முடிக்கும் முன்பு,
“போதும் நிறுத்துங்க” என்று வெடித்திருந்தான் இன்பா.
“இதுதான் பொண்ணு நல்லாயிருக்கணும் நினைக்கிறதா?” என்றவன், “என்னை இன்னும் பேச வைக்காதீங்க” என்றான். அவனின் கோபம் மட்டும்படும் வழி தெரியவில்லை.
“எங்க தனிப்பட்ட விஷயத்தை எட்டிப் பார்க்கிறது தான் உங்க அக்கறையா?” என்று பின்னந்தலையை அழுந்த கோதினான்.
“இன்பா… வேண்டாம் ப்பா…” இளங்கோவன் மகனின் கையை அழுத்திப் பிடிக்க…
“வேண்டாம் இன்பா. நீயும் வார்த்தையை விட்டுடாத. வித்தியாசம் இல்லாமப் போயிடும்” என்றார் கஜேந்திரன்.
“முடியலப்பா… என்னலாம் பேசுறாங்க. நனிக்கு பிறக்கிற குழந்தையும் இவங்களுக்கு உரிமையான சொந்தம்ன்னு ஏன் நினைக்கல. அஷ்மி இன்னும் இந்த வீட்டுக்கே வரல… ஆனால் அஷ்மி வரைக்கும் பேசி தனுவுக்கு ஒரு மாதிரி அழுத்தம் கொடுத்து… நானும் அம்மா மாதிரி நினைச்சிடுவனோன்னு பயமா இருக்கு மாமான்னு அவள் சொல்லி அழும்போது…” என்று மூச்சினை இழுத்து வெளியேற்றியவன், “நான் பேசினா, அண்ணா இறங்கிப்போய் இவங்கக்கிட்ட பேசின சமாதானத்துக்கு மதிப்பு இருக்காதுன்னுதான் பொறுமையா இருந்தேன். ஆனால் இன்னைக்கு அண்ணா முகத்தை பார்த்தீங்க தானே? எப்படி வார்த்தையை விடாம இருக்கிறது” என்றான்.
“இதுக்கு அப்புறமும் உங்களை உறவுன்னு நாங்க மதிச்சா… எங்க அன்புக்கு மதிப்பில்லாமப் போயிடும். நானா சொல்றதுக்கு முன்ன போயிடுங்க. என் பொண்டாட்டி அவள். நாங்க எப்படி வாழனும், அவளை எப்படி சந்தோஷமா வச்சிக்கனும் அப்படின்னு உங்களை விட எங்க எல்லாருக்கும் அவள் மேல அதிக பாசமிருக்கு, அக்கறை இருக்கு” என்றான்.
“மாமா…” என்று தனு இன்பாவை பார்க்க…
“நமக்கு குழந்தையே இல்லைன்னாலும், இந்த வீட்டுல நமக்கான இடம் எப்பவும் மாறாதுடி” என்றான்.
“எனக்கு தெரியும் மாமா” என்று தழுதழுத்த தனு, “எனக்கு எல்லாரும் வேணும் மாமா. இவங்களை மாதிரி நான் இல்லை மாமா” என்றாள்.
“தெரியும்டி” என்ற இன்பா, அவள் அழுவது காண பிடிக்காது, “ம்மா” என்று தன் அன்னையர்களை பார்க்க, இருவரும் தாயாக தனுவை மடி தாங்கியிருந்தனர்.
“இது தான் பாசம்” என்ற இன்பா, “பாட்டிக்கு உங்க உறவு வேணும் அப்படின்னா… அவங்க உங்ககிட்ட பேசுவாங்க. அதுவும் உங்க வீட்டுக்கு வந்து. நீங்க இனி இங்க வராதீங்க. என் பொண்டாட்டியோட நிம்மதி மட்டுமில்ல, இந்த குடும்பத்தோட சந்தோஷமே அழிஞ்சிடும்” என்று விடுவிடுவென அறைக்குள் சென்றுவிட்டான்.
புயல் அடித்து ஓய்ந்த நிலை தான்.
“என்னப்பா இப்படி பேசிட்டான்.” இளங்கோ, பெரியவருக்கு எதுவும் வருத்தம் உண்டாகுமோ என்று கேட்க,
“அவன் பேசினது சரிதான்” என்று கஜமுகன் மனைவியைப் பார்த்தார்.
“இவளை நான் தான் பெத்தனான்னு இருக்கு” என்று லட்சுமி பாட்டி வயிற்றில் கை வைத்துக் கொண்டு கூற…
“ம்மா…” என்று கத்திய குமரியை, “இன்னும் இங்க நின்னு இந்த வீட்டு நிம்மதியை குலைச்சிடாத. உன் புருஷன்கிறதால நானும் தள்ளி நின்னுக்கிறேன். நாளை பின்ன என்னை காரணம் காட்டி நீ சேர நினைக்கக் கூடாது பாரு” என்று குமரியை இழுத்துக் கொண்டு சென்றுவிட்டார் ஜெயந்தன்.
சிலரின் குணங்கள் எப்போதும் மாறாது என்பதற்கு குமரி ஒரு சான்று. குடும்பமென்றால் அனைத்தும் இருக்கத்தான் செய்யும். ஒருவர் மட்டுமே விட்டுக் கொடுத்தலில், ஒரு பக்கம் மட்டுமே நிறுத்திவைக்க இழுத்து பிடிப்பதில் உறவு பலப்பட்டுவிடுவதில்லை.