என் ஆயுள் நீயே 69

என் ஆயுள் நீயே 69

உதயன் மொட்டைமாடி சுற்றுச்சுவரின் மீது அமர்ந்திருந்தான். சுவற்றின் விளிம்பினை அவனது இரு கரங்களும் அழுத்தி பிடித்திருந்தன.

உதயனுக்கு குடும்பம் தான் அனைத்தும். ஒவ்வொருவரின் முகத்தில் மின்னும் சந்தோஷத்திற்காக யோசியாது எதையும் செய்யும் எண்ணம் கொண்டவன்.

இன்று அப்படிப்பட்டவனையே உரிமையுள்ள உறவான அத்தையெனும் பந்தத்தை வெறுக்க வைத்திட்டார் குமரி.

இப்போதும் அவருக்குள் இப்படியொரு எண்ணம் வர தன் மீதான மற்றவர்களின் மதிப்பும், மரியாதையும் தான் காரணமா என்று உள்ளுக்குள் வருந்தினான்.

சிறு பார்வையிலும், செயல்களிலும் கூட உங்களுக்கு மேல் நானென்று உதயன் எந்தவொரு இடத்திலும் நடந்து கொண்டதில்லை. இன்பா சொல்லுக்கு அடங்கியும் இருக்கின்றான், கஜமுகன் சொல்லுக்கு சரியானது எதென்று எடுத்துக் கூறியும் இருக்கின்றான்.

எங்கும் எதிலும் தான் தான் தலைமையென காட்டிக்கொண்டதே இல்லை. எந்த இடத்தில், எப்போதிலிருந்து குமரிக்கு மனதில் இப்படியொரு எண்ணம் முளைத்தது என்று அறியாது அவரின் இன்றைய எல்லை மீறிய, முறையற்ற பேச்சுக்கள், எண்ணங்கள் நினைத்து வருந்திக் கொண்டிருந்தவன், இன்பாவின் அண்மையில் யோசனையை தள்ளி வைத்துவிட்டு தம்பியின் முகம் பார்த்தான்.

“என்ன இப்போ… அதிகம் பேசிட்டன்னு கண்டிக்கப் போறீங்களா?” எனக் கேட்டான் இன்பா. உதயன் பார்வையின் பொருள் விளங்காது.

இல்லையென்று இரு பக்கமும் தலையசைத்த உதயன்,

“எவ்ளோ கோபம் வருது உனக்கு?” என்று தம்பியின் தோளில் கையிட்டு தன்னருகில் அமர்த்திக் கொண்டான்.

“உங்களைவிடவா?” இன்பா கேட்டதில், அவன் தன் கோபத்தை கண்டுகொண்டான் என்பதை புரிந்துகொண்ட உதயன் மென்மையாய் இதழ் விரித்தான்.

“இப்படி சிரிச்சா என்ன அர்த்தம்? வெளியில கொட்டிடும் கோபத்தைக் காட்டிலும், அந்த நேரம் அடக்கும் கோபத்துக்கு வீரியம் அதிகம் தெரியும். கோபத்தை அடக்குறவங்களுக்கு அதன் தாக்கம் அதீதமும் கூட… உங்களவுக்கு என்னால் அடக்கி அமைதியா போக முடியாது. இனியும் அவங்க பேச்சுக்கு உறவுன்னு உங்களை மாதிரி விட்டுக்கொடுத்தும் நிற்க முடியாது. அதான் பேசிட்டேன்” என்று மூச்சை பிடித்துக் கொண்டு கூறினான்.

“இப்போ நான் ஒன்னும் சொல்லலையே!”

“சொல்லுவீங்க தானே! சொந்தம், அத்தை, உரிமையிருக்கு பேசுறாங்க… அப்படி அப்படின்னு” என்றான்.

இன்பாவின் இந்த கோபத்தின் ஆழப்புள்ளி உதயனுக்கானது அல்லவா. மென் முறுவல் உதயனிடம்.

“நல்லவேளை நனி போனப்புறம் பேசினாங்க” என்ற இன்பா, “இனி அத்தைன்னு இறங்கிப் போயிட மாட்டிங்களே?” என்றான்.

உதயன் சிரிப்பையே பதிலாகக் கொடுத்தான்.

“அவங்களை நீங்க ஒதுக்கிட்டிங்கல?”

…..

“பதில் சொல்லுங்கண்ணா” என்றான் இன்பா.

“தனுவுக்கு அவங்க வேணும். முழுசா ஒதுக்க முடியாது.” இப்பவும் எப்படி இப்படியென்று இன்பா உதயனை ஆயாசமாகப் பார்த்தான்.

“உறவுகள் கூடி வாழுறது ஈஸி இல்லை இன்பா. ஆனால் அதுதான் சந்தோஷம்” என்று உதயன் தம்பியின் மனம் புரிந்தவனாக அவனின் தோளில் தட்டிக் கொடுக்க…

“சொந்தத்துக்குள்ள இறங்கிப் போறவனை யாராலும் ஜெயிக்க முடியாது” என்று கஜமுகன் வந்தார். அவர்களின் பேச்சினை கவனித்தவராக.

“நீங்க எதுக்கு தாத்தா இவ்ளோ படி ஏறி வந்தீங்க” என்று சுவரிலிருந்து இறங்கிய உதயன், அவரை அங்கு அமர்வதற்காக அமைத்திருக்கும் மேடையில் உட்கார வைத்தான்.

உதயன் கன்னம் வழித்த பெரியவர்,

“எதையும் நினைச்சு வருந்தாதீங்க. கொஞ்ச நாள் குமரி விலகியிருக்கிறதுதான் நல்லது” என்றார்.

“அதுக்காக முழுசா ஒதுக்க முடியாது தாத்தா. கொஞ்சம் எட்டவே இருக்கட்டும். அதுக்காக முன்ன மாதிரி அவங்களை வச்சு எல்லாம் யோசிப்பேன்னும் சொல்லமாட்டேன். என் மனசுல ரொம்பவே தூரம் போயிட்டாங்க. மாமாவுக்காகவும் தனுவுக்காகவும் மட்டுமே இனி அவங்க நமக்குள்ள” என்றான் உதயன்.

“நீங்க இந்தளவுக்கு வச்சு பேசுறதே அதிகம் அண்ணா. கூட இருந்தாங்க, அடுத்த தலைமுறையில் பாகுபாட்டை விதைச்சிடுவாங்க” என்றான் இன்பா.

“இன்பா…”

“இனி இதைப்பத்தி நான் ஒரு வார்த்தை பேசுலங்க.” இன்பா.

“வேணாம் சொல்றது ஈஸி… வேணும் பிடிச்சு வைக்கிறது தான் கஷ்டம். கொஞ்சம் இறுக்கிப் பிடிச்சாலும் சிக்கல். மொத்தமா விட்டாலும் சிக்கல். இதுதான் உறவு. அணுசரிச்சு தான் போகணும். ஆனால் நாம போகணும் அவசியமில்லை. அத்தையா வந்தா வரட்டும். அவங்களா வரும்போது வராதன்னு சொல்லக்கூடாது. அவ்ளோதான்” என்றான் உதயன்.

“சொந்தத்தை இழுத்துப் பிடிக்க நினைக்கிற நீங்க… காலத்துக்கும் வீடு நிறைஞ்ச உறவுக்குள்ள நல்லாவே இருப்பீங்க” என்று அங்கிருந்து சென்றார் தாத்தா.

“படியில் பார்த்து இறங்குங்க” என்ற உதயன், “கூட போடா” என்று தம்பியை அனுப்பினான்.

“நீங்க வரலையா? தூங்க வேணாமா?” என்றான் இன்பா.

“கொஞ்ச நேரம். வரேன்” என்ற உதயனை பார்த்தபடி அங்கிருந்து சென்ற இன்பா… அஷ்மிதாவுக்கு அழைத்தான்.

“என்னவாம் இந்நேரத்தில் எனக்கு கால்?” அவள் குரல் உற்சாகமாகக் கேட்கவே, “இன்னும் தூங்கலையா நீ?” எனக் கேட்டான் இன்பா.

“உதய் கால் பண்ணுவாங்க. பேசிட்டு தான் தூங்குறதுலாம்” என்றாள்.

“ஹோ… சங்கீத ஸ்வரங்களா?” என்று சிரித்த இன்பா, “நீ கால் பண்ணி பேசு” என்றான்.

“ஏன்?” என்ற அஷ்மிதா, “அவங்க ஃப்ரீ ஆகிட்டு டெக்ஸ்ட் பண்ணுவாங்க இன்பா. அப்புறம் நான் கால் பண்ணுவேன். அவங்க இன்னும் மெசேஜ் பண்ணல. எதோ வேலையா இருப்பாங்களா இருக்கும்” என்றாள்.

“பாருடா… இப்போவே இவ்வளவு புரிதலாக்கும்” என்ற இன்பா, “வீட்டுல குமரி அத்தையால் கொஞ்சம் இஷூ ஆகிடுச்சு அஷ்மி. அண்ணா காட்டிக்கல. பட் ரொம்பவே அப்செட்” எனக் கூறினான்.

“ஹ்ம்ம்… நான் பேசுறேன்” என்றவளிடம், “பிரணவ், நனி வந்தாச்சா?” எனக் கேட்டான்.

“இப்போதான்” என்றவள், “குட் நைட்” என வைத்த பின்னர், “உதய்…” என்று உதயனுக்கு புலனம் அனுப்பினாள்.

அங்கு உதயன் தனுவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“அம்மா இப்படியெல்லாம் பேசுவாங்க, நினைப்பாங்க தெரியாது மாமா” என்றவள் கண்ணீர் நிற்காது வழிந்து கொண்டிருந்தது.

“தனு என்னதிது” என்ற உதயன், “அதெல்லாம் விடு. நீ எப்பவும் போல இரு. அவங்ககிட்ட பேசு” என்றான்.

“என்ன பேச… ஒரு மாதிரி ஃப்ரெஸ்ட்ரேட் பண்ணிட்டாங்க மாமா” என்ற தனு, “நனி பர்ஸ்ட் அம்மா ஆனதில் எனக்கு சந்தோஷம். ரொம்பவே. அம்மா மாதிரி நானும்…” அவள் வார்த்தையை முடிக்கும் முன்பு,

“டேய்…” என்ற உதயன், அவளின் உச்சியில் உள்ளங்கை வைத்து, “எனக்கு உன்னை தெரியும். எதையும் நினைக்காம போய் தூங்கு. என் வெட்டிங்கில் நீ சந்தோஷமா இருக்க வேண்டாமா?” என்றான்.

“உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு மாமா” என்ற தனு, உதயனுக்கு அருகில் சுவற்றின் மீதிருந்த அவனது அலைபேசி வெளிச்சம் கொடுக்க…

“நீங்களும் ஹேப்பியா இருங்க மாமா. எப்படியும் அம்மாவை திரும்ப நம்மோட எப்படி சேர்க்கலாம் அப்படின்னுதான் யோசிப்பீங்க. அதெல்லாம் இப்போ வேண்டாம். இன்னும் நாலு நாள் தான். என்ஜாய் யுவர் டேஸ் மாமா” என்று அங்கிருந்து சென்றாள்.

குமரி விஷயத்தில் உதயன் தன்னை தவறாக நினைக்கமாட்டானென்றாலும், அங்கு அனைவருக்கும் உதயன் தான் ஆறுதல் என்பதால், அவனிடம் தன் வருத்தத்தை பகிர்ந்துகொள்ள வந்திருந்தவளுக்கு, உதயன் என்றும் அவளுக்கு உடன்பிறப்பின் அரவணைப்பு தான். சில பந்தங்கள் உறவுகளால் மட்டும் அமைவதில்லை. மனதால் அங்கீகரிக்கப்படுவது. உதயன், தனுவின் உறவும் அந்த வகையில் அமைந்ததுவே.

மீண்டும் அஷ்மியிடமிருந்து தகவல் வர, அலைபேசி ஒளிர்ந்ததில் எடுத்துப் பார்த்தான். தானாக இளம் முறுவல் இதழில் ஒட்டிக்கொண்டது.

உதயன் பார்த்துவிட்டான் என்றதுமே, காணொளி அழைப்பு விடுத்திருந்தாள்.

உதயன் எடுத்ததும் அவனுக்கு பின்னணியில் சுற்றுப்புறம் பார்த்து, “டெரஸ்சில் நிக்கிறீங்களா?” எனக் கேட்டாள்.

“ம்ம்” என்றவன், “வன் செக்” என்று அழைப்பைத் துண்டித்து, அவன் தனதறைக்குள் வருவதற்குள் அஷ்மிதா நாலு ஐந்து உதய் அனுப்பி வைத்துவிட்டாள்.

மெத்தையில் வாகாக அமர்ந்து அலைபேசியை தான் தெரியும் வகையில் சரியாக பொருத்திவிட்டு அழைப்பு விடுத்தவன், திரையில் அஷ்மிதாவின் முகம் தெரிந்ததும்…

“என்னவாம் உதய்க்கு?” என்றான், மின்னலென இடப்புற புருவத்தை ஏற்றியிறக்கி…

“சும்மா… தாய் மாமா ஆகீட்டிங்க… வாழ்த்துக்கள்” என்றாள். சந்தோஷத்தோடு.

“அஷ்மிதா அத்தை ஆனதுக்கும் வாழ்த்துக்கள்” என்றான். மூறல்கள் காட்டி.

“கால் பண்ணாங்களா?” அஷ்மிதா கேட்க, “ஹ்ம்ம் வீட்டுக்கு வந்தாச்சு” என்றான் உதயன்.

“இப்போ ஓகேவா?”

“பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்” என்ற உதயன், “எல்லாம் ஓவர். இனி உதய், அஷ்மிதா வெட்டிங் தான்” என்றான்.

“ஹ்ம்ம் இன்னும் ஃபோர் டேஸ்” என்ற அஷ்மிதா அவனின் முகம் பாராது சொல்ல…

“அப்புறம் அஷ்மிதா இங்க… உதய் பக்கத்துல” என்றான். அவளில் மட்டுமே பார்வையை பதித்து. கருவிழிகள் உருளாது.

அஷ்மிதா இரு உதட்டையும் ஒன்றாக மடித்து விடுவிக்க, அவள் மறைக்க தவிக்கும் நாணத்தை அவளது கன்னங்கள் காட்டிக் கொடுத்திட்டது.

“பேச்சுக்கே முகம் பிங்கிஷ் ஆகுது… ஓ காட்” என்ற உதயன், “உதய் தாங்குவனா?” என்றான்.

“அச்சோ உதய்” என்று அவள் கீழ் உதட்டை அழுந்த கடித்து விடுக்க…

“ஊஃப்ப்…” என்று நெஞ்சில் கை வைத்து காற்றை ஊதினான். அவளிடம் சிறுக சிறுக தடுமாறிக் கொண்டிருக்கிறான். தெரிந்தும் தொலைய காத்திருக்கிறான்.

“என்ன பண்றீங்க நீங்க? இதுக்கு மேல முடியாது” என்றவள் பேச்சை மாற்றும் பொருட்டு, “இன்பா கால் பண்ணான். இப்போ நீங்க ஓகே தான?” எனக் கேட்டாள்.

“பார்த்தா உதய் ஓகேவா இல்லையான்னு அஷ்மிதாவுக்கு தெரியலையா?” என்ற உதயன், “கிட்ட வந்து தெரிஞ்சுக்கோ அஷ்மிதா” என்றான்.

அவனது குரலில் கட்டுண்டவள்,

கிட்ட வந்து என்றதில் அவளும் தன்னைப்போல் திரையில் முன் வந்திருக்க, அவனது விழிகள் காட்டிய ஒளியில், மீசை ஓர சிலிர்ப்பில் தன் செயல் புரிந்து நெற்றியில் தட்டிக் கொண்டவளாக, தள்ளி அமர்ந்தாள்.

“பேசியே மயக்குறீங்க?” என்றாள். அவனின் சிரிப்பில் தன்னை ஒளித்து.

“ஹான்… நான் பேசுறது இப்போ தாம்மா. முன்னவே உதய்கிட்ட அஷ்மிதா…” என்று அவன் நிறுத்த,

“அச்சோ சொல்லாதீங்க” என்று கண்களை ஒற்றை கை வைத்து மூடிக்கொண்ட அஷ்மிதா, “நான் வைக்கிறேன். குட் நைட்” என்று வேகமாக அழைப்பை வைத்திருந்தாள்.

உதயன் மனம் முழுக்க நேசம் பரப்பி விரவி கிடந்தாள் அவனின் அஷ்மிதா.

உதயன் திருமணம் என்பதாலே நடந்த விரும்பத்தகாத நிகழ்வை அனைவரும் ஒதுக்கி வைத்துவிட்டனர்.

அடுத்த நாள் குமரியின் வீட்டிற்கு செல்லாது, இறால் பண்ணையில் வைத்து ஜெயந்தனை பார்த்து, “நீங்க இல்லாம குடும்பம் நிறையாது மாமா. அதுக்காக அத்தையை இயல்பா உடனே ஏத்துக்க முடியுமான்னும் தெரியல. ஆனால் நீங்க இல்லாம என் கல்யாணம் இல்லை. வந்துடுங்க” என்று சொல்லியிருந்தான்.

“நீ உசந்தவன்’ய்யா.” ஜெயந்தன் நெகிழ்வாய், அவனின் கரம் பற்ற, அழுத்தி விடுத்தான் உதயன்.

அடுத்தடுத்த நாட்கள் எல்லாம் கொண்டாட்டம் தான்.

சீரும் சிறப்புமாக பல மகிழ்வான தருணங்களோடு உதயச்செல்வன் அஷ்மிதா திருமணம் நடந்திருந்தது.

(அடுத்த பகுதியில் திருமண நிகழ்வுகள்.)

error: Content is protected !!
Scroll to Top