என் ஆயுள் நீயே 70

என் ஆயுள் நீயே 70

அன்றிலிருந்து மூன்றாம் நாள் திருமணம்.

அத்தீஸ்வரம் தொடங்கி நகரம் வியக்கும் வகையில் அரங்கேறியது திருமண கொண்டாட்டம்.

அன்று காலை பந்தக்கால் நடும் நிகழ்வில் உதயனின் உடன்பிறப்புகளின் கொண்டாட்டத்தில் திருமண சடங்குகள் ஆராவாரமாய் ஆரம்பமானது.

அடுத்து நலங்கு வைபவம்.

மனையில் உதயன் அமர வைக்கப்பட்டிருக்க… குமரி தான் முறைக்கு முதலில் மஞ்சள் தடவினார். ஜெயந்தன் பல அறிவுரைகள் வழங்கி அழைத்து வந்திருந்தார்.

வந்தவரை யாரும் ஒதுக்கவுமில்லை, அதே சமயம் முன்பு போல் நெருக்கம் கொள்ளவுமில்லை. லட்சுமி பாட்டியே வாவென்று அழைத்ததோடு ஒரு வார்த்தை பேசவில்லை. தனு அவரின் அருகில் கூட செல்லவில்லை. அதுவே அவருக்கு பெரும் தண்டனையாக இருந்திட, வருந்தி பயனில்லை என்பதும் அவருக்கு புரிந்தது. 

குமரி நலங்கு வைத்து முடித்த அடுத்த கணம் ஜெயந்தன் மாமன் முறையை செய்துவிட்டு குமரியை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். இனி குமரியின் நிலை அங்கு இப்படித்தான். விலகளுமில்லை. பட்டுக்கொள்ளலும் இல்லை.

வந்திருந்த உறவினப் பெண்கள் அனைவரும் வைத்து முடிய, நனியிதழ், தனு தொடங்கி, பிரணவ், இன்பா, ஆர்யன் மற்றும் எழிலும் கூட நாங்களும் வைப்போமென்று போட்டி போட்டு கலாட்டா செய்ததில் அவ்விடம் அதீத சிரிப்பால் நிறைந்திருந்தது.

உதயனின் ஒவ்வொரு நிகழ்விலும் நனியிதழ் மட்டுமில்லாது பிரணவ், ஆர்யனும் கூட உடனிருந்திட விருப்பம்கொள்ள, இங்கும் அங்குமாக எல்லோரும் இருக்கும் வகையில் நேரம் ஒதுக்கி அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இங்கு முடித்துவிட்டு மற்றவர்கள் பிரணவ் இல்லம் சென்று, அஷ்மிதாவுக்கு நலங்கு வைபவம் செய்திட வேண்டும்.

“மாலையை ரூமுக்கு போயிட்டு கழுட்டிடுங்க.” லட்சுமி பாட்டி சொல்ல பிரணவ், உதயனை அழைத்துக்கொண்டு அறைக்குச் சென்றான்.

எழில் தன்னுடைய அறைக்குச் செல்ல படிகளில் ஏறிட, முதல் தளம் படிகள் மறைவிற்குள் சென்றதும்,

“என்னடி ரொம்ப அழகா இருக்க?” என்ற குரல் பின்னால் ஒலிக்க, “சாருக்கு அவங்க மாமா போனதும் தான் நான் கண்ணுக்குத் தெரியிறேன் போல” என்று குரல் வைத்தே தன்னவன் என கண்டுகொண்ட எழில், “உன் கன்னத்துல என்னவோ” என்று மஞ்சள் நிறைந்த கையை அவனது கன்னத்தில் துடைப்பது போல பூசிட, மஞ்சளை தாண்டி ஸ்பரிசம் உணர்ந்த அவளின் விரல்களின் குளுமையில் அவள் கை மீது தன் கை வைத்து அழுத்திக் கொண்ட ஆர்யனின் விழிகள் தானாக மூடிக் கொண்டன.

“லவ் ஃபீல்லாம் இருக்கும் போல” என்று எழில் அவனை கேலி செய்ய, “அதெல்லாம் நிறையவே இருக்குடி. பக்கம் வந்தா உனக்கு தான் ஆபத்துன்னு தள்ளி நிக்கிறேன். நம்ம கல்யாணம் வரை நல்ல பையனா இருக்கணும்ல” என்றான்.

“இருந்து என்ன பிரயோஜனம்” என்ற எழில், “கிஸ் பண்ணனும் கூட உனக்கு தோணுனது இல்லையா?” என்று கேட்க, “என்ன ஏத்தி விடப் பாக்குரியா” என்று அவளை சுவற்றில் சாய்த்து கைகளால் அரண் அமைத்தவன், தன் மூச்சுக் காற்று அவளின் முகம் மோத நெருங்கி நின்றான்.

“ஒத்த முத்தத்துக்கு மூச்சு முட்டிப் போவ…” என்றான்.

அவனின் இச்செயலில் அவளுள் மென் உணர்வு அலையாய் பொங்கி எழுந்திட, கருவிழிகள் பந்தாடா, தொண்டைக்குழி ஏறியிறங்க மருண்டு பார்த்தாள் அவனை.

ஆர்யன் ஒற்றை விரலால் அவளின் கன்னம் தீண்ட,

“இதுக்கே ஃப்ரீஸ் ஆகிட்ட…” என்றான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்று அவனின் மார்பில் கை வைத்து தள்ளி விலகி நடந்தவளின் கரம் பற்றி இழுத்து, அவளின் முதுகு தன் மார்பில் பதியுமாறு தன்னுடைய கை வளைவிற்குள் கொண்டு வந்திருந்தான்.

“அச்சோ விடுங்க… யாரும் வரப்போறாங்க” என்று அவள் பார்வையை சுற்றி ஓட்டிட…

“என்னவோ கேட்ட… இப்போ கொடுக்கட்டுமா?” என்றான். அவனது குரலில் அவளின் பதற்றம் கூடியது.

“ஆரி வேணாம். யாரும் வந்தா தப்பாகிடும்.”

“அது நீ என் கன்னத்தில் கை வைக்கும் போது யோசிச்சிருக்கணும். இல்லையா அப்படி கேட்கும் போதாவது யோசிச்சிருக்கணும்” என்றவன், அவளின் காதோரம் ஊதிட, “ஆர்யா” என்று அவளின் குரல் காற்றாய் ஒலிக்க, கைகள் அணிந்திருந்த பாவாடையை இறுக்கிப் பிடித்தன.

“ஆர்யா தான்… என்னவாம்” என்றவன், தன் முக நாடியை அவளின் வெற்றுத் தோளில் பதித்து, அவளின் கன்னத்தோடு தன் கன்னம் உரசினான். மென்மையாய்.

“ஆர்யா பிளீஸ்” என்றவள், அவனின் பிடி இலகுவாக தளர்ந்ததில், வேகமாக ஓடி விட்டாள்.

அவள் சென்ற பின்பும், தன் மீது ஒட்டி நிற்கும் அவளின் வாசத்தில் தன் வசமிழந்து ஆர்யன் அதே இடத்தில் புன்னகையோடு நின்றிருக்க…

“அக்கம் பக்கம் பார்த்து லவ் பண்ணுடா தம்பி” என்று வந்தாள் தனு.

“பார்த்துட்டிங்களா?” அதிர்ச்சி ஆகினான்.

“பார்க்கலன்னு சொல்லலாம் தான் நினைக்கிறேன். ஆனால் எனக்கு பொய் சொல்லி பழக்கமில்லடா தம்பி” என்று தனு சொல்லிட, “நான் பார்க்கவே இல்லை ஆரி” என்று சிரிப்போடு தனுவின் பின்னிருந்து வந்தாள் நனியிதழ்.

“அண்ணி நீங்களுமா?” என்று மீண்டும் அதிர்வாகிய ஆர்யன், “எல்லாம் இவளால” என்று சத்தமின்றி முணகினான்.

“சும்மா… உங்க ரெண்டு பேர் குரல் கேட்கவும் அங்கவே படியில் நின்னுட்டோம். எதுவும் பார்க்கல” என்று தனு சொன்ன பிறகே அவனுக்கு மூச்சு சீரானது.

“கொஞ்சம் ஜாக்கிரதையாவே லவ் பண்ணணும்” என்று நகர்ந்தான்.

“ஆரி இப்போ கிளம்பனும். நாம போய் தான் அஷ்மிக்கு ஸ்டார்ட் பண்ணனும்” என்றாள் நனி.

“அதை உங்க ஹஸ்க்கு நினைவுப்படுத்துங்க. மாம்ஸ் கூட இருந்தா அவருக்கு எல்லாமே மறந்து போகும்” என்று சொல்லிக்கொண்டே அவன் சென்றிட, தனுவும் தன்னுடைய அறைக்குச் சென்றாள்.

நனியிதழ் அங்கிருந்த படியில் அமர்ந்தவளாக பிரணவ்வுக்கு அழைத்தாள்.

அறைக்குள் வந்த உதயன் குளிப்பதற்காக, அணிந்திருந்த சட்டையை கழட்டிட…

“மாம்ஸ் வன் செக்” என்ற பிரணவ், சட்டையின்றி கையில்லா வெள்ளை பனியனும் வேட்டியுமாக, முகத்தில் பூசப்பட்ட மஞ்சளுடன், கழுத்தை ஒட்டியும் ஒட்டாத தங்க சங்கிலி தனியொரு பொலிவைக் கூட்டிட, உச்சி கேசத்தில் ஆங்காங்கே ஆசீர்வாதம் செய்ய தூவப்பட்ட மலர்கள் இருக்கும் தோற்றத்தை புகைப்படம் எடுத்திருந்தான்.

“ஃபோட்டோகிராஃபர் தான் ஃபோட்டோ எடுத்திருக்காரே… இப்போ எதுக்கு ஃபோட்டோ? அதுவும் ஷர்ட் கழட்டியதும்” என்ற உதயன் குளியலறை கதவில் திறப்பதற்காக கை வைத்திட,

“அஷ்மி இங்க வரும்போதே சொல்லி அனுப்பினா… உங்களை இந்த லுக்கில் போட்டோ எடுத்து அனுப்பனுமாம். அதான் மறந்துட்டேன். இப்போ எடுத்தேன்” என்ற பிரணவ், “அனுப்பியாச்சு” என்று மெத்தையில் அலைபேசியை தூக்கிப் போட்டுவிட்டு, பின்னால் கைகள் ஊன்றி அமர்ந்து கால்களை ஆட்டிட…

“டேய்” என்று வேகமாக அவன் பக்கம் வந்திருந்தான் உதயன்.

“என்னாச்சு மாம்ஸ்? குளிக்கல?”

“நான் ஷர்ட் போடலடா!”

“ஹான்… பின்ன போட்டுகிட்டா குளிக்க முடியும்?”

“உன்னை கொட்டப் போறேன் பாரு” என்ற உதயன், “நிஜமாவே அனுப்பிட்டியா நீ?” என்று கேட்டான். இடையில் கைகள் வைத்து.

“ஆங்…” என்ற பிரணவ், அப்போது தான் புரிந்தவனாக, “சாரி மாம்ஸ்” என்றான்.

“அன்செண்ட் பண்ணுடா” என்றான்.

“விடுங்க மாம்ஸ்… பார்க்க வேண்டியது தானே!”

“கொன்னுடுவேன் உன்னை. ஒழுங்கா ஓடிடு” என்ற உதயன் தான், அவனை முறைத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றிருந்தான்.

“சாரி மாம்ஸ்.” பிரணவ் கத்தி சொல்லிட…

“நான் வரதுக்குள்ள ஓடிடு நீ” என்றிருந்தான் உதயன் உள்ளிருந்து.

“ஓகே ஓகே… கூல்” என்ற பிரணவ், “நாங்க கிளம்புறோம்” என்றான்.

“மொதல்ல கிளம்பு” என்றான் உதயன். அந்நேரம் நனியும் அழைப்பு விடுக்க, கீழே சென்ற பிரணவ் சொல்லிக்கொண்டு கிளம்பியிருந்தான்.

அவர்களுடன் இன்பா, தனு, எழில் ஆகியோரும் சென்றிட, அஷ்மிதாவுக்கும் நலங்கு பல கலாட்டாக்களுக்கு மத்தியில் சிறப்பாக நடந்து முடிந்தது.

“அண்ணிக்கு நலங்கு முடிஞ்சு ரூம் போயாச்சு” என்று மனையிலிருந்து அஷ்மிதா எழுந்ததும் எழில் உதயனுக்கு தகவல் அனுப்பிட, உதயன் புதிதாக அவளுக்காக வாங்கியிருக்கும் மூக்குத்தியை புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்தான்.

அப்போதுதான் அறைக்குள் வந்து கதவை சாற்றிய அஷ்மிதா, அலைபேசி ஒலி எழுப்பவும் அவன் அனுப்பிய தூது புரிய…

“இப்போ எப்படி கால் பண்றது?” என்று தன்னை கண்ணாடியில் பார்த்தாள்.

மஞ்சள் நிற புடவையில், கன்னங்கள் இரண்டும் மஞ்சளில் நனைந்திருக்க, மெல்லிய ஈரம் படர்ந்த கேசம் முன் நெற்றியில் களைந்திருக்க, ஆங்காங்கே தலையில் பூசப்பட்ட அரப்பும், தூவப்பட்ட மலர்களுமாக இருந்தாள்.

“உதய்…” என்று அவள் அனுப்பிட…

“பார்க்கணும் அஷ்மிதா” என்று வெளிப்படையாகவே தன் மனதை அனுப்பிவிட்டான்.

அவனின் மனம் புரிந்து தயங்கினாலும், அழைத்துவிட்டாள்.

அடுத்த கணம் அழைப்பை ஏற்றிருந்த உதயனின் கண்களில் மின்னல்கள் பாயும் ரசனை.

முழு மஞ்சள் நிலவாய் முகம் காட்டியவளை பார்வையால் சுருட்டிக் கொண்டிருந்தான்.

“அஷ்மிதா” என்றவன் விரல் திரையில் அவளின் கன்னம் தொட, அவனின் விரல் நிழல் ஊரலுக்கே தேகத்தில் சிலிர்ப்பை உணர்ந்தவள், “வைக்கட்டுமா?” எனக் கேட்டாள்.

“அஷ்மிதாவுக்கு உதய் மஞ்சள் பூசனுமே” என்றான். திரை தொட்ட விரலை மெல்ல அவளின் கன்னத்தில் நகர்த்தி.

“உதய்…”

அஷ்மிதா கண்களிலே அத்தனை தடுமாற்றம் காட்டிட… அவனிடம் அவளை தன் வசம் இழுக்கும் இளமுறுவல்.

“போ… ” என்றான்.

“உதய்…”

“நாளைக்கு ஈவ்வினிங் பார்க்கலாம். ஹேப்பி மேரிட் லைஃப் அஷ்மிதா” என்று அழைப்பை வைத்திருந்தான்.

அலைபேசியை மார்போடு அழுத்திக் கொண்டவள், பிரணவ் அனுப்பிய புகைப்படத்தை திறந்து பார்த்தாள்.

அவனின் முகமும், தோற்றமும் கண்களை விரிய வைத்திட, தனக்குள் அவனை நெஞ்சம் நிறைய சிறை கொள்ளும் மாயம். அத்தோற்றதில் அவனை பார்த்திட, ரசனையும் காதலும் போட்டி போட்டது.

“ஹேப்பி மேரிட் லைஃப் உதய்” என்றாள். ஆழ்ந்த புன்னகையுடன்.

வெளியில் அழைக்கும் குரல் கேட்டிட, வேகமாக குளித்து முடித்து வெளியில் வந்தாள்.

இன்பா, எழில், தனு புறப்படத் தயாராக இருந்தனர்.

“என்னடா கிளம்புற?” அஷ்மிதா இன்பாவிடம் கேட்க, “நாளைக்கு பெண்ணழைப்புக்கு நானும் தனுவும் தான் வருவோம். இன்னைக்கு நலங்கு வச்சாச்சுன்னு அண்ணாவை இனி வெளிய விடமாட்டாங்க. எல்லாம் செய்ய நான் இருக்கணுமே அங்க” என்றான் இன்பா.

அடுத்து அவர்கள் கிளம்பிட, அடுத்தடுத்து என்ன என்று அனைவரும் மற்ற வேலைகளில் தீவிரமாகிட,

“மெகந்தி போட ஆள் வந்திருக்கு அஷ்மி” என்று நனியிதழ் அழகு நிலைய பெண்ணை அழைத்து வந்து அஷ்மியின் அறையில் விட்டுச் சென்றாள்.

“என்ன அக்கா மாம்ஸ் முகத்தை வரையப் போறீங்களா?” ஆர்யன் அஷ்மியின் அருகில் வந்து அமர்ந்து வினவ…

“இல்லை” என்றிருந்தாள் உடனடியாக.

“நீங்க நோ சொல்றது ஆச்சரியமா இருக்கு. மாமா மேல இருக்க லவ்வுக்கு அவர் முகத்தை டாட்டூ கூட போட்டாலும் போடுவீங்க நினைச்சேன்” என்றான்.

“மனசுல மட்டுமே நிறைய வேண்டிய விஷயம், இப்படித்தான் வெளிப்படுத்தணும் அவசியமில்லை ஆரி. மனசால கண்டிப்பா ஆத்மார்த்தமா உணர முடியும் அப்படிங்கிற அப்போ இதெல்லாம் அவசியமில்லை” என்றாள்.

உண்மை. நிதர்சனமும் கூட.

“உங்க லவ்வும் உங்களை மாதிரியே அழகா இருக்கு அஷ்மி அக்கா” என்ற ஆர்யன், “உங்களை விட்டு இருந்திடுவனா?” என்றான்.

“ஆரி…” 

“நாள் குறைய குறைய எமோஷ்னல் ஆகுதுக்கா” என்றவன், “அண்ணா பார்த்தா திட்டுவாங்க. உங்க முன்ன காட்டிக்கக் கூடாது சொன்னாங்க” என்றான்.

அவள் எதிர்பார்த்த ஒன்று, இப்படி ஒரு தருணம் கடக்க வேண்டுமென்று முன்பே திருமணப் பேச்சுக்கள் ஆரம்பம் ஆனது முதல் மனதில் பதிய வைக்கத் தொடங்கிய ஒன்று. 

தம்பியின் கரத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

“இதெல்லாம் இனி பழகனும்.” சொல்லிய ஆரியனிடம் மென் சிரிப்பு.

அஷ்மிதாவிடம் ஆழ்ந்த மௌனம்.

அவளின் மௌனங்கள் யாவும் அர்த்தம் கொள்ளும் வகையில் அனைத்து உறவுகளின் அன்பின் நிறைவில் உதயனின் மனைவி ஆகியிருந்தாள் அஷ்மிதா.

 

error: Content is protected !!
Scroll to Top