என் ஆயுள் நீயே 71

என் ஆயுள் நீயே 71

சற்று நேரத்திற்கு முன்பு தான் பெண்ணழைப்பு முடிந்தது. உதயன் வரவேற்பு வேண்டாமென்று சொல்லிவிட்டதால், இரவு விருந்து முடிய, காலை திருமணத்திற்கு யாவும் ஆயத்தமாகத் தொடங்கினர்.

மண்டபத்தில் ஆங்காங்கே உறவினர்கள் அமர்ந்து பேசியபடியும், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் உறங்கிக் கொண்டும் இருக்க, ஒரு பக்கம் மேடை அலங்காரங்கள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் அனைவரும் உறங்கச் சென்றிட, வீட்டின் இளமை பட்டாளம் மட்டும் மேடைக்கு முன்னிருக்கும் கூடத்தில் அமர்ந்து பேசி சிரித்தபடி இருந்தனர்.

“கொஞ்ச நேரமாவது போய் தூங்குங்கடா” என்று பெரியவர்கள் அனைவரும் ஆள் மாற்றி ஆள் வந்து சொல்லியும் அவர்கள் நகர்வதாய் இல்லை.

ஆர்யன் அடிக்கும் மொக்கை காமெடிக்கெல்லாம் சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தனர்.

உதயன், அஷ்மிதாவுக்கு திருமணத்திற்கு முன்பான கடைசி நலங்கு அப்போது தான் மண்டபத்தில் வைத்து முடிந்திருக்க, அவர்கள் இருவரும் தத்தம் அறைக்கு குளிக்கச் சென்றிருந்தனர்.

ராகவன், கஜா, லட்சுமி பாட்டி தவிர்த்து பெரியவர்களும் சிறியவர்களுடன் அரட்டையில் அமர்ந்துவிட்டனர்.

இதுபோன்ற தருணங்கள் அடிக்கடி அமைவதில்லையே. அனைவரும் ஒன்று கூடி இருக்கும் நேரம் மனதிற்கு நிறைவைத் தர, விடிந்ததும் உதயன் அஷ்மிதா திருமணம் எனும் அதீத மகிழ்வில் உறக்கமின்றி விடியலுக்காக எதிர்பார்ப்போடு விழித்திருந்தனர்.

நனியிதழ் தாய்மையின் சோர்வு காரணமாக பிரணவ்வின் தோள் மீதே சாய்ந்து உறங்கியிருக்க… அவளின் கையை தன் கைக்குள் கோர்த்து வைத்திருந்தான் பிரணவ்.

“ரூமுக்கு கூட்டிட்டு போடா.” குளித்து விட்டு வந்த உதயன் கூறினான்.

“முடியாது. நானும் அரட்டையில் உட்கார்ந்திருப்பேன் சொல்லி அடமா இருந்துட்டு தூங்கிட்டா” என்ற பிரணவ், “இன்னும் த்ரீ ஹவர்ஸ் தானே இருக்கு. கொஞ்சம் நேரம் பேசிட்டு போனா ரெடியாகக் கரெக்டா இருக்கும்” என்றான்.

“என்னை விட்டுட்டு என்ன பேச்சு” என்று அஷ்மிதா வர, அவளின் கூந்தலில் ஈரம் சொட்டியது.

“சரியா துவட்டலையா அஷ்மி” என்று கேட்ட கங்கா, இளங்கோ தன் தோள் மீது போட்டிருந்த துண்டை எடுத்து துவட்டிவிட்டார்.

உதயன் அருகில் அமர்ந்திருந்த எழில் எழுந்து, “இங்க உட்காருங்க” என்று நமட்டு சிரிப்பு சிரித்தபடி மற்றொரு இருக்கையில் அமர்ந்தாள்.

“நீ சொல்லலனாலும் அங்க தான் உட்காருவேன்” என்று அமர்ந்த அஷ்மியின் கரம், இருக்கையில் படிந்திருந்த உதயனின் கரத்தோடு உரசிட, அவளின் குளுமை அவனுள் தீயாய் இறங்கியது.

“சில்லாகுது.” உதயன் சொல்லிட, அஷ்மிதா பார்வையை தாழ்த்தினாள்.

உதயன் சொல்லிய அர்த்தம் வேறு, அவனுக்கு அந்தப்பக்கம் அமர்ந்திருந்த எழிலுக்கு மிக மெலிதாகக் கேட்ட அவனது வார்த்தையில் புரிந்து கொண்டது வேறு.

“ட்ரையர் போட்டா சரியாகிடும்” என்று எழில் சொல்ல, உதயன் உதட்டை மடித்து விடுத்தான். அஷ்மிதாவிடம் விஷமப்புன்னகை.

உதயன் பார்வையில் குறுகுறுப்பைக் காட்டிட, எழிலை சமாளிக்கும் விதமாக, ” டூ டேஸ்ஸா டிரையர் போட்டுட்டு இருக்கேன். அதான் டைம் இருக்கே. டிரை ஆகிடும்” என்றாள் அஷ்மிதா.

“ஆகலன்னா போட்டுக்கலாம். ஈரத்தோட பின்னிடாத, எப்படியும் எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு போற வரை கழட்ட முடியாது. தலைவலி எடுத்துக்கும்” என்றார் காமாட்சி.

இப்படி ஆளாளுக்கு ஒன்று மாற்றி ஒன்றென்று பேசிக் கொண்டிருக்க, “எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்திருக்கும் போது, இந்த குமரியும் நல்ல மாதிரியா இருந்திருக்கலாம் தோணுது” என்றார் கஜேந்திரன்.

“பொண்ணழைப்புக்கு இருந்தாங்களே” என்று விமலா சொல்ல…

“முடிஞ்சதும் கிளம்பியாச்சு” என்றார் கங்கா.

“தப்புன்னு புரிஞ்சாலும் இறங்கி வரமாட்டேன்னு அப்படியென்ன வீம்பு” என்று இன்பா கேட்க,

“இன்பா” என்றான் உதயன். அழுத்தமாக.

“ஒண்ணும் சொல்லக் கூடாதே. சிப்… ஓகேங்களா” என்று இன்பா உதட்டை இழுத்து மூடுவது போல செய்கையில் காட்டிட, அனைவரிடத்திலும் சிரிப்பு.

“நீயும் இவங்க மாதிரியே இருந்திடாத அஷ்மி. குமரி அத்தை ஆடின ஆட்டமே தாங்கல… இதுல அந்த வந்தனா அமைதியா ஆள் அரவமே காட்டாம இருக்கிறதை பார்த்தா நிறைய நினைக்கத் தோணுது” என்றான் இன்பா.

இன்பா வந்தனாவைப் பற்றி சொல்லியதும், அஷ்மியும், உதயனும் அர்த்தமாகப் பார்த்துக் கொண்டனர்.

“அங்கென்ன பார்வை. நீயாவது கொஞ்சம் விவரமா இரு” என்றான் இன்பா. மீண்டும் வலியுறுத்துவதைப் போல.

“அப்போ மாம்ஸ்க்கு விவரமில்லை சொல்றீங்களா நீங்க?” என்று ஆர்யன் பேச்சை வேறு பக்கம் இழுக்க…

“அடேய் நான் எப்போடா அப்படி சொன்னேன்” என்று அலறினான் இன்பா.

“நீ அஷ்மியை விவரமா இருன்னு சொன்னா, அதுக்கு இன்னொரு அர்த்தம் இதுதானே” என்று பிரணவ்வும் சொல்லிட, இன்பா அப்பாவியாக என்ன சொல்வதென்று தெரியாது தன் அண்ணனை பார்த்தான்.

உதயன் முகத்தில் விரவிய புன்னகையில் தான் அவனுக்கு அப்பாடா என்றானது.

“என்ன பார்க்குற நீ? உன் பங்குக்கு எதுவும் சொல்லனுமா?” இன்பா கேட்க,

“நான் நீன்னு போட்டிபோட்டா இங்க எதுவும் நிலைக்காது இன்பா. உறவுன்னா அப்படி இப்படித்தான் இருப்பாங்க. இதே எனக்கும் உதய்க்கும் இடையில் கூட மிஸ் அண்டெர்ஸ்டேன்டிங் வரலாம். அதுக்காக விட முடியுமா? எல்லா உறவும் அப்படித்தான். விடக் கூடியது இல்லை. இறங்கிப் போறதால எல்லாம் சரியாகும் அப்படின்னா ரெண்டு அடி வைக்கிற இடத்தில் நாலு அடியா கூட இறங்கலாம். தப்பில்லை” என்றாள் அஷ்மிதா.

“அப்படி சொல்லு என் ராசாத்தி” என்று கங்கா, அஷ்மியின் கன்னம் வழித்திட, உதயனின் பார்வை மென் அரவணைப்பாய் அஷ்மியின் மீதுதான்.

“ம்க்கும்… நல்லா சேர்ந்திருக்காங்கப்பா கூட்டு” என்றான் இன்பா.

அவ்விடம் மேலும் சில பேச்சுக்கள் நீண்டு கலகலப்பாக, நேரம் விரைந்தது.

“பேசிட்டு இருந்தா நேரத்தை கவனிக்கிறதே இல்லை” என்று இளங்கோ தான் நேரமானதை உணர்த்தி அனைவரையும் தயாராக விரட்டினார்.

அஷ்மிதாவுக்கு அலங்காரம் செய்திட அழகு நிலையப் பெண்கள் இருவர் வந்திட, கிளம்பி நின்றிருந்த தனுவும், எழிலும் அவர்களுக்கு உதவிக் கொண்டிருக்க, நனியிதழ் மெல்ல நகர்ந்து கஜமுகன் இருக்கும் அறைக்குச் சென்றாள்.

“தாத்தா” என்று உள்ளே நுழைந்தவள், அங்கு லட்சுமி பாட்டியும் இருக்க, எப்படிக் கேட்பதென்று தெரியாது இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தாள்.

“என்னடா?” என்று அழைத்து தனக்கு பக்கத்தில் பேத்தியை அமர்த்திக்கொண்ட லட்சுமி, “எதும் சாப்பிட்டுடுடா… நேரமானா அசதியாகிப் போவும்” என்றார். பரிவுடன்.

“சரிங்க பாட்டி” என்ற நனியிதழ், தாத்தாவை பார்க்க, அவரோ எதுவாயினும் பார்த்துக் கொள்ளலாம் என்று கண்கள் மூடி திறந்தார்.

“இங்க இருக்கியா நீ” என்று உள்ளே வந்தான் பிரணவ்.

“இதுல டிபன் இருக்கு சப்பிட்டுடு இதழ்” என்று கொண்டு வந்த தட்டினை மூடியிருந்த இலையை திறந்து மனைவி முன் வைத்தான்.

“இப்போ தான் காபி குடிச்சேன் பிரணவ்” என்று நனியிதழ் சொல்ல…

“நான் ஊட்டிவிட்டா நீங்க எதுவும் தப்பா நினைப்பீங்களா?” என்று பெரியவர்களை பார்த்துக் கேட்ட பிரணவ், அவர்கள் இல்லையென்ற சிரிப்பில், நனியிதழ் மறுக்க மறுக்க உணவை முழுதாக ஊட்டி முடித்தான்.

“உங்களோடவே வச்சுக்கோங்க பாட்டி இவளை. இல்லைன்னா மேடை ஏறுறேன் இறங்குறேன்னு நடந்துட்டே இருப்பாள். மாம்ஸ் மேடைக்கு வந்ததும் மேல வந்தா போதுமென்று” மனைவியின் கன்னம் தட்டிச் சென்றான்.

“ஹேய் பிரணவ் உன்னை எங்கெல்லாம் தேடுறது” என்று எதிர்ப்பட்ட இன்பா, “அண்ணாவை மேடைக்கு நீதான் அழைச்சுப் போகணும். ஐயர் கூப்பிட்டுட்டு இருக்கார். நீயில்லைன்னு ஆரியை கூட்டிப்போக சொன்னா, அவன் நீயும் வரணும் சொல்றான். வா” என்று அவனை இழுத்துக் கொண்டு உதயன் அறைக்குச் சென்றான்.

அங்கு உதயன் இல்லாது, அவன் அணிய வேண்டிய மாலையை கையில் வைத்துக் கொண்டு ஆர்யன் மட்டும் நின்றிருக்க,

“அண்ணா எங்கடா?” என்றான் இன்பா.

“அவங்க ஆளை பார்க்கப் போயிருக்காங்க” என்றான் ஆர்யன்.

“இப்போவா?” பிரணவ் கேட்க,

“நானும் இதேதான் கேட்டேன். இப்போதான்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க” என்றான் ஆர்யன்.

“யாரும் பார்த்தா என்னடா ஆகுறது?” பிரணவ் உதயன் வருகிறானா என்று எட்டிப் பார்த்தான்.

“விடுடா… இதே ஃப்ளோர் தானே! யாரும் பார்க்க சான்ஸ் இல்லை” என்றான் இன்பா.

அப்போது தான் அஷ்மிக்கு முழு அலங்காரம் முடிய, எழில், தனு, நனியென நால்வரும் மாற்றி மாற்றி சுயமி எடுத்துக் கொண்டிருந்தனர்.

அறை கதவு தட்டப்படவும்,

“அதுக்குள்ள வர சொல்றாங்களா?” என்று கதவை திறந்த நனியிதழ், தன் அண்ணனை அங்கு கண்டு, “உங்களுக்கு இங்கென்ன வேலை?” என்று புருவம் உயர்த்தினாள்.

“டேய்…” என்று சிரித்த உதயன், “உன் அண்ணியை பார்க்கணும். வழி கிடைக்குமா?” என நேரடியாகக் கேட்டான்.

“அச்சோ செல்வா… நீங்க இருக்கீங்களே” என்று சிரித்த நனியிதழ்,

“நாம வெளியில் போவோம் வாங்க” என்று பின்னால் திரும்பிச் சொல்ல…

அப்போது தான் உள்ளேயிருந்த மூவரும் யாரென்று பார்த்தனர்.

“உதய்” என்று மென்மையாய் உச்சரித்து அஷ்மிதா கண்கள் விரிக்க…

“என்ன மாமா… கல்யாணத்துக்கு முன்ன ரொமான்ஸ்ஸா?” என்று கண்ணடித்தாள் தனு.

“இன்பா உன்னைத் தேடினான் ஓடு” என்று அவளை விரட்டிய உதயன், உள்ளே நுழைய…

“சீக்கிரம் வெளியில் வரணும்…” என்று மிரட்டலாகக் கூறினாள் எழில்.

“உத்தரவுங்க மேடம்” என்ற உதயன் மூவரும் வெளியேறியதும் கதவினை சாற்றிட…

“எதுக்கு டோர் க்ளோஸ் பண்றீங்க” என்றாள் அஷ்மிதா.

“இப்போ போயிடுவேன். பதறாத அஷ்மிதா” என்ற உதயன், அவளை கீழிருந்து மேல் முழுதாய் பார்வையால் வருட, அவளும் அவனை முழுதாக பார்வையால் தழுவியிருந்தாள்.

“மீசை ஷார்ப் பண்ணீங்களா?” அதனை நுனியில் பிடித்து இழுக்க நீண்டுவிட்ட கையை உதயன் பார்த்த பார்வையில் சட்டென்று கீழிறக்கிவிட்டாள்.

அவளிடம் தடுமாற்றமான வெட்கம்.

உதயன் அதில் லயித்து மீண்டு அட்டகாசமாக புன்னகையை சிதறவிட்டான்.

“அஷ்மிதா அழகா இருக்கீங்களே” என்ற உதயன், தன் மூடிய கையை அவள் முன் திறந்தான்.

அவளின் முகூர்த்தப் புடவை நிறத்திற்கு ஏற்ற வகையில் அடர் லாவண்டர் வர்ண கல் பதித்த மொட்டு வடிவ மூக்குத்தி. மொட்டு குவியும் இடம் மிகச்சிறிய முத்து மணி ஒன்று அசைந்தாடியது.

“வாவ் உதய்…” என்று அவனது உள்ளங்கையில் தனது விரல்கள் குவிய மூக்குத்தியை கையில் எடுத்தவள், “இட்ஸ் பியூட்டிஃபுல்” என்றாள்.

“ரொம்ப” என்ற உதயன் பார்வை, அவனது வார்த்தையின் அர்த்தம், இரண்டும் உணர்ந்து கீழ் அதரத்தை கவ்வி விடுத்தாள்.

“உதய்…”

அவளின் குரல் காற்றாய் ஒலிக்க… அவளை மெல்ல நெருங்கினான்.

தொட்டு விடும் தூரமில்லை. தொடாத நெருக்கமும் இல்லை. அவளின் உச்சி வகிட்டில் மென்மையாய் தன் நெற்றி முட்டியவன்,

“ஹேப்பி மேரிட் லைஃப் மிஸஸ் உதயச்செல்வன்” என்று நகர்ந்து நின்றான்.

error: Content is protected !!
Scroll to Top