எழுத்தாளர் ஶ்ரீ

எழுத்தாளர் ஶ்ரீ அவர்களிடம் அவர்களது எழுத்து மற்றும் எழுத்துப் பயணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்களின் அனுபவத்தின் வாயிலாக சுவாரஸ்யமான முறையில் பதில் வழங்கியிருக்கின்றார்.

எழுத்தாளராக அவரின் அனுபவம், பல எழுத்தாளர்களுக்கு தெரியாதவற்றை தெரிந்துக்கொள்ளவும், வாசகர்களுக்கு அவரது எழுத்தின் மதிப்பும், அதற்கான அவரது மெனக்கெடல்களை புரிந்துகொள்ளவும், சில கேள்விகளும், பதில்களும் வாய்ப்பாக அமையுமென கருதுகிறேன்.

************************

கேள்விகளும் பதில்களும்…

* உங்களைப்பற்றி சில…

நான் ஸ்ரீ. MBA graduate, தகவல் தொழில்நுட்பத் துறையில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்து குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக வேலையை விட்டு விட்டேன். 2016ல் இருந்து கதைகள் எழுதி வருகிறேன். சில்சி தளத்தில் தொடங்கிய என் எழுத்துப் பயணம் பத்து ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.

1. 40 நாவல்கள் எழுதிவிட்டீர்கள்… ஆனால் “எழுத்தாளர் ஶ்ரீ”யை உருவாக்கிய முதல் கதை எது? அந்தக் கதையை நினைத்தால் இப்போதும் என்ன உணர்வு வருகிறது?

ஸ்ரீயை உருவாக்கிய முதல் கதை என்பது அவள் சுயத்திற்கானத் தேடலில் தொடங்கியது. வேலையை விட்டபின் வாழ்க்கையின் பிடிப்பு, நமக்கான அங்கீகாரம் என்பதைக் கொண்டு ஆரம்பித்தது தான் என் எழுத்து.

உண்மையில் இத்தனை கதைகளும் புத்தகங்களும் வளர்ச்சியும் நானே எதிர்பார்த்திராதது தான்.

2. தலைப்பு வைத்தபோது, கதை எப்படி இருக்க வேண்டும் என்று உங்கள் மனதில் இருப்பது, எழுதிக்கொண்டே மாறியதுண்டா?

நிச்சயம் உண்டு பல நேரங்களில் அந்தக் கதை தான் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என்பதை மனப்பூர்வமாக உணர்ந்ததுண்டு. 

ஒரு வரியில் நமக்குள் இருக்கும் கதைக்குத் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதோடு சரி. பல நேரங்களில் கதை தான் என் கைப் பிடித்து அழைத்துச் செல்லும்.

3. தங்களின் கதையின் தலைப்பை ஒரு வாசகர் படித்தவுடன் என்ன உணர வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்?

கதையின் சராம்சத்தை அவர்கள் யூகிக்க வேண்டும் என்று தோன்றும். தலைப்பிற்கு ஏற்ற கதை என்று முடிவில் அவர்கள் கூறிவிட்டால் அதற்கு மேல் என்ன வேண்டும்.😊

4. உங்களைப்பற்றி வெளியுலகம் அறிந்திடாத சுவாரஸ்யமான தகவல்? (விருப்பமிருந்தால்)

எழுத்தைப் போன்றே பிடித்தது நடனம். இப்போதெல்லாம் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. முடிந்தால் மீண்டும் அந்த துறையில் எதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.

5. உங்கள் 40 கதைகளையும் ஒரே அறையில் வைத்து கதாநாயகர்களை மட்டும் சந்திக்க முடிந்தால், முதலில் யாரிடம் பேசுவீர்கள்? ஏன்?

உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் ஜீவிகா. ஒரு வகையில் அவள் மொத்தமாய் ஸ்ரீயின் மறுஉருவம் தான் அதனால் இருக்கலாம்.

நாயகர்களில் மதுர காதல் மலரே உன்னியேட்டன். கேரளத்து வாசத்தின் மீது எனக்கு சற்று அதீத காதல் அதனால்.

6. உங்கள் கதாபாத்திரங்களில் “இவரை நான் உருவாக்கவில்லை… இவரே என்னிடம் வந்து கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார்” என்று தோன்றிய கதாபாத்திரம் உண்டா?

மணவாட்டி சைலப்பன்- சிவகாமி. இதுபோன்ற ஒரு கதை மீண்டும் என்னால் சாத்தியமா என்ற கேள்வி எப்போதுமே எனக்குள் இருந்து கொண்டே இருக்கும்.

7. நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுடைய மனதை அதிகமாக சோதித்த கதாபாத்திரம் யார்?

40வதுகதை நாயகன் மேகன். என்னவோ இவன் என் நாயகர்களில் இருந்து சற்றே மாறுபட்டவனாய் இருக்கிறான்.

8. ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கிவிட்டு, பின்னர் “இவரை இப்படிப் படைக்காமல் இருந்திருக்கலாமோ?” என்று எப்போதாவது தோன்றியிருக்கிறதா?

அப்படி ஒரு சூழல் என் கதைகளில் இருந்ததில்லை. வாசகர்கள் அடிக்கடி கூறுவது போல் எல்லாருமே ரொம்ப நல்லவங்க என் கதைகளில்.😄

9. 40 நாவல்கள் எழுதிவிட்ட நிலையில், இன்னும் எழுதப்படாமல் உங்கள் மனதில் சுற்றிக்கொண்டிருக்கும் கதையின் விதை இப்போதும் தனித்துவமானதாக இருக்குமென்று நினைக்கிறீர்களா?

நினைத்த அனைத்தையுமே எழுதி விட்டேன். எப்போதுமே ஒரு கரு மனதில் தோன்றிவிட்டால் எப்படியும் அதை எழுதி விடுவேன். 

நெகடிவ் சப்ஜெக்ட் என்று யோசித்து காலம் தாழ்த்தியது “என்றும் உன் நினைவில்”, கதை. ஆனால் நினைத்த படி அந்த கதை வந்ததோடு வாசகர்களிடம் வரவேற்பையும் பெற்றிருந்தது.

10. உங்களுடைய கதைகளில் ஒரு கதாபாத்திரத்தின் முடிவை எழுதும்போது எழுத்தாளராக நீங்கள் முடிவு செய்கிறீர்களா, அல்லது கதாபாத்திரமே அந்த முடிவை உங்களிடம் வாங்குகிறதா?

பெரும்பான்மையான நேரங்களில் முடிவு என்னுடையது தான். 

11. வாசகர்கள் ஒரு கதாபாத்திரத்தை நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக நேசித்த அனுபவம் உண்டா?

பலமுறை நடந்துள்ளது. அதன் பின் நானே அவற்றை மீண்டும் மீண்டும் படித்து அகம் மகிழ்வேன்.

12. நீங்கள் விரும்பிய கதாபாத்திரத்தை வாசகர்கள் ஏற்றுக்கொள்ளாத அனுபவம்?

அப்படி எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை.

13. ஒரு கதையை எழுதும்போது கதாநாயகன் கதாநாயகியைப் பற்றித்தான் அதிகமாக யோசிப்பீர்களா? அல்லது கதையின் சூழல்தான் முதலில் முக்கியமென யோசிப்பீர்களா?

சூழலும் முக்கியம் ஆனால் என் கதைகளில் பெரும்பாலும் காதலன் காதலி கணவன் மனைவி அவர்களுக்கு இடையிலான உறவு எப்படி இருக்க வேண்டும் என்பது தான் கருவாக இருக்கும். அதனால் அவர்களைச் சுற்றியே கதை இருப்பதாய் படிப்பவர்களுக்கு தோன்ற வாய்ப்பிருக்கிறது.

14. காதல் கதைகளில் காதலர்களை மட்டும் அல்லாமல் குடும்பத்தையும் கதையின் முக்கிய அங்கமாக்குவதில் உங்களுக்கு இருக்கும் தனிப்பட்ட ஈர்ப்பு என்ன?

காதலுக்கு காதலர்கள் போதுமானது ஆனால் திருமணத்திற்கு குடும்பங்களும் அவசியம் அதிலும் பெண்ணிற்கு கணவனின் வீடு என்பது எந்த மாதிரியான சூழல்களைக் கொடுக்க வேண்டும் என்பதை எழுதும் போது அது பெரும்பாலும் பலரின் மன ஏக்கங்களாக இருக்கும் நிச்சயமாய்.

15. உங்கள் 40 கதைகளில் இருந்து ஒரு கதாபாத்திரத்தை நிஜ வாழ்க்கையில் உங்கள் நண்பராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

நீ நாம் காதல் கதை நாயகன் ராகேஷ். அண்ட் எப்போதுமே மனதில் இருப்பது உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் ஜீவிகா.

16. ஒரு கதாபாத்திரத்தை நிஜ வாழ்க்கையில் சந்திக்கவே கூடாது என்று நினைத்தால் யார்?

பெருங்காதலின் பேரவா கதையில் நாயகனின் தந்தை கதாபாத்திரம். ஆனால் வாழ்க்கையில் அன்றாடத்தில் அதிகம் கண்ணில் படும் பாத்திரம் அது என்பது தான் சோகம்.

17. நீங்கள் எழுதிய கதைகளில் “இந்தக் காட்சியை எழுதும்போது நானே அழுதுவிட்டேன்” என்று சொல்லக்கூடிய தருணம் இருக்கிறதா?

மணவாட்டி, என்றும் உன் நினைவில் இரண்டு கதைகளுமே கண்ணீர் கண்ணை நிறைக்க எழுதிய இடங்கள் அதிகம்.

அதற்கு மாறாக, “இந்தக் காட்சியை எழுதும்போது எனக்கே சிரிப்பு வந்தது” என்று நினைவில் நிற்கும் சம்பவம்? அம்மாதிரியான தருணங்களில் என்ன தோன்றும் உங்களுக்குள்?

உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் கதை மொத்தமுமே சிரித்து சிரித்து எழுதிய கதை.

18. எழுதாமல் இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், எழுதாமல் இருப்பது உங்களுக்கு கடினமா, எழுத வேண்டும் என்ற எண்ணத்தை அடக்குவது கடினமா?

இரண்டுமே கடினம். பல நாட்கள் எதுவுமே எழுத தோன்றாத Block நிலை வரும். அதுவே ஒரு தனி மன அழுத்தத்தைக் கொடுக்கும்.

சில நேரங்களில் காட்சிகள் வரிசைக் கட்டி நிற்கும் நேரம் தனிப்பட்ட வேலைகளால் எழுத முடியாத நிலை வரும் போது ஏன் எதற்கு என்று தெரியாமலே பயங்கர கோவமான மனநிலை இருக்கும். அதை எழுதி முடித்த பின் ஒரு பெரும் நிம்மதி கிடைக்கும்.

19. உங்கள் கதைகளுக்கு தலைப்பு வைக்கும் போது கதையைப் பார்த்து தலைப்பு வருகிறதா, தலைப்பைப் பார்த்து கதை உருவாகிறதா?

கதையின் ஒரு வரி மனதில் தோன்றிய பின் தான் அதற்கான தலைப்பைப் பற்றிய சிந்தனை வரும்.

20. 40 நாவல்களுக்குப் பிறகு, “இந்தக் கதையை நான் முன்பே ஏதோ ஒரு கதையில் எழுதிவிட்டேனோ?” என்ற பயம் உங்களுக்கு வந்ததுண்டா? அதை எப்படித் தவிர்க்கிறீர்கள்?

அடிக்கடி வரும். அடிப்படை கரு காதல் என்பதால் எங்கேனும் எதாவது மறுபடி வந்துவிடுமோ என்று யோசித்து யோசித்து தான் எழுதுவேன்.

21. வாசகர் ஒருவர் உங்கள் கதையில் நீங்கள் நினைக்காத ஒரு புதிய அர்த்தத்தைக் கண்டுபிடித்து சொன்னால், “நான் அப்படி நினைத்தே எழுதவில்லை” என்று சொல்வீர்களா, அல்லது வாசகரின் பார்வையையும் கதையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்வீர்களா?

நிச்சயம் அவர்களின் பார்வைக்கு மதிப்பு கொடுப்பேன். என் எண்ணம் அது இல்லை என்றாலும் எந்தளவு கதையில் அவர்கள் ஈடுபாட்டோடடு படித்தால் இப்படியும் ஒரு கோணத்தில் யோசிப்பார்கள் என்று நினைப்பேன்.

22. ஒரு நாள் உங்கள் 40 நாவல்களில் ஒன்றை மட்டும் திரைப்படமாகவோ தொடராகவோ மாற்றும் வாய்ப்பு கிடைத்தால், எந்தக் கதையைத் தேர்ந்தெடுப்பீர்கள்? அந்தக் கதையின் எந்த அம்சம் திரையில் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

எழுத்தாளராய் என் அத்தனைக் கதைகளையும் பெரிய திரையில் பார்க்க ஆசை தான். குறிப்பிட்ட ஒன்று எனில் காதல் கள்வனே கதை.

23. கதை எழுதும்போது இதனை செய்யக்கூடாது, செய்ய வேண்டுமென நீங்கள் நினைப்பது?

கதைக்குத் தேவையானதை மட்டுமே எழுத வேண்டும். வள வளவென்று எழுதி படிப்பவர்களை சோர்வடைய செய்யக் கூடாது. முக்கியமாக என் கதையைப் படிப்பவர்கள் ஒரு வரியைக் கூட கடந்து செல்லாமல் மனம் லயித்து படிக்க வேண்டும் என்று நினைப்பேன்.

24. ஶ்ரீயின் கதைகளை இதுவரை வாசிக்காத ஒருவரிடம், “என் கதைகளை ஒருமுறை வாசித்துப் பாருங்கள்” என்று சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் எந்தக் கதையிலிருந்து அவர்களைத் தொடங்கச் சொல்வீர்கள்? ஏன்?

உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள்

தத்வமஸி

மணவாட்டி

காதல் கள்வனே

25. புதிதாக வரும் எழுத்தாளர்களும், அவர்களின் கதைகளும் உங்களின் பார்வையில் எப்படி இருக்கிறது?”

நான் பெரிதாய் கதைகள் படிப்பதில்லை. வருடத்திற்கு ஒன்று படித்தால் பெரிய விடயம். ஆனால் முகப் புத்தகத்தில் பலரின் விமர்சனங்களைப் பார்க்கும் போது அவர்களின் எழுத்தை நினைத்து பிரம்பிப்பாய் இருக்கும்.

26. இந்த எழுத்துலகப் பயணம் எப்படியிருக்கிறது?

ஒன்றுமே தெரியாமல் இருந்திருக்கிறோம் என்று தோன்றுமளவிற்கு பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். 

அதை விட சக எழுத்தாள வாசகர்களின் அறிமுகம் மிகவும் பிடித்த விஷயம். ஸ்ரீ என்பவளுக்கான தனிப்பட்ட வட்டம் எப்போதும் மனதிற்கு அதீத மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒன்று.

27. வெற்றி, தோல்வி… எப்படி பார்க்கிறீர்கள்?

நீங்கள் நினைத்ததை எழுத்தில் கொண்டு வந்து அதை வாசகர்களும் அங்கரித்து விட்டால் அதுதான் உண்மையான வெற்றி.

தோல்விகள் மனதையும் வெற்றிகள் தலையையும் அழுத்தாத வரை இரண்டுமே வாழ்விற்கான ஏதோவொரு பாடம் தான்.

28. எழுத வேண்டுமென்ற எண்ணத்தின் விதை எங்கு துளிர்த்தது?

சிறு வயதில் சிறுவர் மலரில் தொடங்கிய வாசிப்பு தான் முதல் விதை. ஆனால் சில்சி தளத்தில் எழுதிய முதல் கதைக்கு வந்தக் கருத்துக்கள் தான் இந்த 40 கதைகளுக்கான அஸ்திவாரம்.

29. இடைவெளிக்குப் பிறகு எழுத வந்தபோது, முன் பின் என்ற மாற்றம் இருந்ததா? எப்படி அதை பார்த்தீர்கள்?

கொரோனா காலத்தில் ஒரு இடைவெளி வந்தது. கிட்டத்தட்ட 3-4 ஆண்டுகள் பெரிதாய் எழுதவில்லை. அதன் பின்னான என் எழுத்து என்பது நானே பிரமித்து நிற்கும் ஒன்று. எழுத்து நடையிலும் கதையைத் தேர்வு செய்வதிலும் முதிர்ச்சி தெரிகிறது.

இது என் கதை என்று கூற முடியாத அளவிற்கு மாறியிருக்கிறது என்பது என் தொடர் வாசகர்களிடம் இருந்து கிடைத்த தகவல்.😊

30. வாசகர்களிடம் சொல்ல வேண்டுமென நீங்கள் நினைப்பது?

என் கதைக்கான வாசகர்கள் வெகு குறைவு. அதாவது கதையைப் பற்றிய பின்னூட்டமோ கருத்துக்களோ பகிர்ந்து கொள்பவர்கள் சிலர் மட்டுமே. அமைதியான வாசகர்கள் தான் அதிகம்.

ஆனால் பல சூழ்நிலைகளில் எதிர்பாராதவர்கள் எல்லாம் உங்கள் கதை படித்திருக்கிறேன் என்று கூறிக் கேட்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கும்.

என் எழுத்துக்கான அங்கீகாரத்தைக் கொடுக்கும் ஒவ்வொரு வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இப்போதெல்லாம் இன்னும் மகிழ்ச்சியைக் கொடுப்பது சக எழுத்தாளர்களே கதையைப் படித்து வாட்ஸ் அப்பிலோ மெசென்ஜரிலோ அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது.

எவ்வித போட்டி பொறாமைகளுமின்றி இது போன்ற நட்பு வட்டங்கள் உரிமையோடு நிறை குறைகளைச் சுட்டிக் காட்டி வாழ்த்து தெரிவிப்பது பெரு மகிழ்ச்சியாய் இருக்கும்.

அத்தனை பேருக்கும் என்றும் ஸ்ரீயின் பேரன்புகளும் பிரியங்களும்.❤

***************

எழுத்தாளர் ஶ்ரீ அவர்களுக்கு நன்றி.

தங்கள் எழுத்துப் பயணம் தொடர்ந்து சிறக்கட்டும்…

தங்கள் பேனா இன்னும் பல அழகான கதைகளைப் படைக்கட்டும்…

ஒவ்வொரு படைப்பும் புதிய வாசகர்களை சென்றடைந்து, அவர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கட்டும்.

எழுத்துலகில் தாங்கள் இன்னும் பல உயரங்களைத் தொட்டு, எண்ணற்ற வெற்றிகளையும் அன்பான வாசகர்களையும் பெற மனமார்ந்த வாழ்த்துகள்! ❤️🌷

 

நட்புடன் 💞

பிரியதர்ஷினி S

error: Content is protected !!
Scroll to Top