என் ஆயுள் நீயே 72

என் ஆயுள் நீயே 72

மணமகள் அறைக்கு வெளியில் நின்றிருந்த நனியிதழ், தனு, எழில் ஆகிய மூவரும், அங்கு விமலா வருவதைக் கண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொள்ள…

“என்ன வெளியில் நிக்கிறீங்க… அஷ்மி எங்க?” என்றார்.

மூவரும் ஒன்றாக திருதிருக்க…

விமலா கதவை திறக்க கையை வைத்திட…

“அச்சோ” என்று பதறினர் மூவரும்.

“என்னாச்சு?” என்று அவர் கையை வேகமாக பின்னிழுக்க,

“ஒண்ணுமில்லை… ஒண்ணுமில்லையே” என்று தனுவும், எழிலும் கையை விரிக்க… விமலா தன் மருமகளை பார்த்தார்.

“அது அத்தை…” என்ற நனியிதழ், “அண்ணா உள்ள” என்க…

“ஹோ” என்றவர், “அண்ணா லவ் பண்றார்… தங்கச்சிங்க காவலா?” எனக் கேட்க, மூவரின் தலையும் ஒன்றுபோல ஆமென்று ஆடி, இல்லையென அசைந்தது.

அதில் விமலா சற்று சத்தமாக சிரித்திட…

“அம்மா வந்துட்டாங்க போல” என்றாள் அஷ்மிதா.

“வரட்டும்” என்ற உதயன், “உதய்… வெயிட்டிங் ஃபார் யூ அஷ்மிதா” என்று சொல்லி நகர, “உதய் வன் செக்” என்றாள்.

உதயன் நின்று திரும்பிட,

கண்ணாடி முன்பிருந்த சந்தனத்தை எடுத்து மெல்லிய கீற்றாய் சிறு அளவில் அவனது பக்கம் நெருங்கி நெற்றியில் வைத்தாள்.

தாழ்ந்திருந்த அவனது விழிகள், தன்னை நோக்கி உயர்ந்து கரு விழிகள் அசைய தன் நெற்றியில் பதிந்த அஷ்மியின் கண்களில் விழத் தவித்தவனின் மூச்சுக் காற்று சூடாய் வெளியேற…

“நல்லாயிருக்கு” என்று அவனது நெற்றி சந்தனத்தை பார்த்துக்கொண்டே விலகினாள்.

உதயன் பார்த்துக் கொண்டே நிற்க,

“பொண்ணுங்களுக்கு திருநீர், சந்தனம் பசங்களுக்கு வச்சுவிட ரொம்பப் பிடிக்கும். உங்களுக்கு இந்த சந்தனம் அழகா இருக்கே. அதான் வச்சு விட்டேன்” என்றாள். அவன் முகம் காட்டும் ரசனையில் விழுந்தவளாக.

“பசங்களுக்கும் ஒரு விஷயம் ரொம்பப் பிடிக்கும்” என்ற உதயன், “இப்படி இங்க யாருக்குமே தெரியாம இல்லை… எல்லாரும் பார்க்க அழுத்தமா” என்றான்.

உதயன் என்ன சொல்கிறான் புரியவில்லை…

அதற்குள் விமலா அஷ்மி என அழைத்திட,

“மேடையில் பார்க்கலாம்” என்று அவளின் கன்னம் தட்டி கதவை திறந்து வெளியேறினான்.

“லேட் ஆகலையே?” உதயன், விமலா நிற்கின்றார் என்று தடுமாற்றாமோ பதற்றமோ கொள்ளாது, அவரிடமே கேட்டான்.

“மாமியாருக்கு கொஞ்சமும் பயமில்லை.” எழில் சொல்லிட…

“பயப்பட என்ன தப்பு பண்ணனாம்?” என்ற உதயன், விமலா காட்டிய சிரிப்பில் அங்கிருந்து சென்றான்.

“எப்போ போனீங்க நீங்க?”

உதயன் தன்னுடைய அறைக்கு வரவும், ஆர்யன் கேட்டான்.

“இப்போ என்னடா?” என்ற உதயன், “லவ் பண்ண போனா டைம் ஆகத்தான் செய்யும்” என்று அங்கிருந்த கண்ணாடியில் தன்னை பார்த்தான்.

உடுத்தியிருந்த பட்டு வேட்டிக்கு, முன்னுச்சி கேசம் நெற்றி தொட, நெற்றியில் அஷ்மி வச்சுவிட்ட சந்தனம் அத்தனை அழகாக இருந்தது.

“அங்க போயிட்டு வந்ததும் முகத்துல தனி கலை மின்னுது” என்ற இன்பா, “உங்களுக்கு வெட்கப்படலாம் தெரியுமா?” என்றான்.

பற்கள் வரிசைகட்டி இதழ் விரிய உதயனது முகம் காட்டிய நாணத்தில்.

“அப்புறம் கிண்டல் பண்ணலாம். ஆல்ரெடி மாமாக்கள், அப்பா, தாத்தா எல்லாரும் வந்து கூப்பிட்டுட்டு போயாச்சு” என்ற பிரணவ், “மாலையை போடுடா” என்றான். தம்பியிடம்.

“நானா?”

“நீயும் மச்சான் தான?” என்ற பிரணவ், “போடு… இதிலெல்லாமா முன்னுரிமை. மனசில் அன்பிருந்தா போதும்” என்றான்.

“குட் மெசேஜ். இதை அப்படியே குமரி அத்தை இருக்கும் போது சொல்லு மாப்பிள்ளை” என்ற இன்பா, உதயன் பார்த்த பார்வையில் வாயை மூடிக்கொண்டான்.

“அவங்க இப்படித்தான்னு ஆகிப்போச்சு. திரும்பத்திரும்ப இதையே பேச பிடிக்கல இன்பா” என்றான் உதயன்.

“சாரிங்ண்ணா” என்ற இன்பா, “வாட்ச் கட்டுங்க” என்று தானே கட்டிவிட, ஆர்யன் மாலை அணிவிக்க, மூவரும் சேர்ந்து உதயனை மேடை அழைத்து வந்தனர்.

தங்களுக்கான வேலைகள் அனைத்தும் முடித்து, குடும்ப உறுப்பினர்கள் யாவரும் மேடையில் கூடி விட்டனர். தன் நிகழ்வில் தன்னுடைய சொந்தங்கள் அனைவரும் தன் பக்கத்தில் நிற்க வேண்டுமென்றே கல்யாண மேடையை அத்தனை பெரிதாக விஸ்த்திரமாக அமைக்கச் சொல்லியிருந்தான் உதயன். கஜமுகன் தொடங்கி, ராகவன் உட்பட எழில், ரீமா வரை அனைவரும் மேடையில் நின்றிருந்தனர்.

உதயன் ஆசைப்படுவான் என்று இளங்கோ சொல்லி, குமரியையும் ஜெயந்தன் மேடைக்கு அழைத்து வந்து தன் பிடியிலேயே நிறுத்திக் கொண்டார்.

ஐயர் சொல்லிய யாவற்றையும் உதயன் இன் முகமாக செய்திட, எழில், நனி, தனு, ரீமா நால்வரும் அஷ்மியை அழைத்து வரச் சென்றனர்.

“அவங்க வந்தாச்சா?” அவர்கள் அறைக்குள் வந்ததும் அஷ்மிதா கேட்க,

“ம்ம்… இப்போ நீங்க. போலாமா?” என்று எழில் அஷ்மியின் கையை பிடிக்க, “இதுக்குத்தான் அண்ணா வந்தாங்களா?” என்றாள் நனியிதழ்.

தனுவும் நனி எதை சொல்கிறாள் என்று கண்டு பிடித்தவளாக,

“மாமாக்கு மட்டும் எப்படி இப்படி யூனிக்கா டிசைன்ஸ் கிடைக்குதோ” என்றாள்.

அஷ்மிதா புன்னகைக்க…

“நீங்க நடத்துங்க” என்றாள் ரீமா.

அஷ்மிதாவின் புன்னகை அவளது மூக்குத்திக்கு இணையாக மின்னியது.

சிரிப்போடு நால்வரும் இணைந்து அஷ்மிதாவை அழைத்துவர, பாந்தமானத் தோற்றத்தில் தன் கால் உரச அருகில் அமர்ந்தவளை பக்கவாட்டில் பார்த்த உதயன்,

“எல்லாரும் பார்க்க அழுத்தமா ஒன்னு வைக்கலாமா அஷ்மிதா?” எனக் கேட்டான்.

“ஹான்…” எதை கூறுகிறான் என்று அவள் அதிர்ந்து பார்க்க…

அந்நேரம் சரியாக பெரியவர்களிடம் ஆசிபெற்று வந்த தாலியை உதயனிடம் கொடுத்து கட்ட சொல்ல, மங்கள இசை முழங்க, தன் சுற்றத்தின் நெஞ்சத்தில் நிறைந்திருக்கும் சந்தோஷத்தின் ஆசீர்வாதத்தோடு, தன்னை அதிர்ந்து பார்த்திருக்கும் அஷ்மிதாவின் முகத்தை முறுவலோடு பார்த்துக்கொண்டே தாலி கட்டினான்.

“வெல்கம் யூ, இன்டூ உதய்ஸ் லைஃப் அஷ்மிதா.” உதயனின் ஆழ்ந்த குரலில் அஷ்மிதா ஆழமாக ஆழ்ந்து போனாள்.

“கையை அவா தலையை சுத்திக் கொண்டு போய் வகிட்டில் வைங்கோ” என்று ஐயர் சொல்லிட, இரு விரலால் இறுக்கிப் பிடித்து எடுத்த குங்குமத்தை அழுத்தமாய் அவளின் நெற்றியில் வைத்தான்.

இருவரின் பார்வையும் ஒரே நேர்கோட்டில்.

மனங்கள் இரண்டும் கண்கள் வழி சங்கமித்தன.

“எல்லாரும் பார்க்க வச்சாச்சு” என்று உதயன் கண்கள் சிமிட்ட… அப்போது தான் அவளுக்கு, அவன் இவ்வளவு நேரமும் குங்குமத்தை சொல்லியிருக்கிறான் என்பது புரிந்தது.

விரல் கோர்த்து அக்னி வலம் வர, பிணைந்திருந்த விரல் ஸ்பரிசத்தில் அவன் காட்டிய மென்மை அவளை பூரிக்க வைத்தது.

பாத விரல் பிடித்து மெட்டி அணிவிக்கையில் அவன் கைகள் காட்டிய அரவணைப்பில், அத்தனை அழுத்தம். சின்ன சின்ன செயல்களிலும் காதலை காட்டி தனக்குள் அவளை இழுத்துக் கொண்டிருந்தான்.

அடுத்தடுத்து சடங்குகள் முடிய, சிறியவர்கள் மணமக்களுக்கான விளையாட்டுக்களை முன்னின்று வைத்தனர்.

அஷ்மிதா, உதயன் இருவரும் மாற்றி மாற்றி தலையில் அப்பளம் உடைக்க, இறுதியில் உதயன் அஷ்மியின் தலையில் படிந்திருந்த அப்பளத் துகள்களை மெதுவாக தட்டிவிட, மொத்த பட்டாளமும் அருகில் நின்று கூச்சலிட்டனர்.

பார்த்திருந்த பெரியவர்களுக்கு அதீத மகிழ்வு.

அடுத்து பானைக்குள் மோதிரம் எடுக்கும் விளையாட்டு.

“உங்க கையிலிருக்கும் மோதிரத்தை கழட்டிப் போடுங்கோ” என்று ஐயர் சொல்ல…

“மூக்குத்தி எல்லாம் போட்டு எடுக்கக் கூடாதா” என்று ஆர்யன் கேட்டதில், ஆர்ப்பாட்டமாக அரங்கம் நிறைய சிரிப்புகளின் சந்தங்கள் பூரணமாய்.

யாவும் முடிய உறவினர்கள் சென்றிருக்க, ஜெயந்தன் குமரியைக் கூட்டிக்கொண்டு புறப்பட…

“இன்னும் எத்தனை நாளுக்கு மாப்பிள்ளை இப்படி?” என்றார் கஜேந்திரன்.

“இனி இப்படி இருந்தாதான் நல்லாயிருக்கும் மச்சான்” என்று கிளம்பிவிட்டார்.

எல்லாருக்கும் குமரியின் குணம் எட்ட நிற்பது தான் சரி என்ற எண்ணம். ஆதலால் அதற்கு மேல் அவரைப்பற்றி நினைக்கவில்லை.

குடும்பத்தாரின் விருப்பப்படி அத்தனை மகிழ்வாய், நிறைவாய் உதயன் அஷ்மிதா திருமணம் முடிந்திருக்க, முதலில் உதயன் வீட்டிற்கு செல்வதாக முடிவானது.

உதயனது தாரின் பின்னிருக்கையில் மணமக்கள் ஒன்றாய் அமர்ந்திருக்க, இன்பா வண்டி ஓட்டினான்.

வீட்டின் முன்பு வண்டி நின்றதும்,

அஷ்மிதா உதயன் கையை இறுக்கமாகப் பற்றினாள்.

இந்த நொடிக்காக இருவரின் எதிர்பார்ப்பு காதலாய் அதிகம்.

ஆரத்தி எடுக்க, இணைந்த கைகளில் அழுத்தம் கூட்டி, ஒன்றாக உயர்த்திய பாதங்களை, இணையாக தரையில் அழுத்தமாக நிலைப்படி தாண்டி வீட்டிற்குள் அடி வைத்தனர். அந்நேரம் தொட்டுக்கொண்ட இருவரின் பார்வைகளில் ஆயிரமாயிரம் உணர்வுகள் முட்டி மோதிட பெரும் காதல்.

அஷ்மிதா விளக்கேற்ற வீட்டின் வெளிச்சமாய் அனைவரின் முகமும் கனிந்து ஒளிர்ந்தது.

அதிக நேரமில்லாததால் பால், பழம் உண்டு திருச்செந்தூர் கிளம்பினர்.

அழைத்துச்செல்ல நனியும், பிரணவ்வும் மண்டபத்திலிருந்தே உடன் வந்திருந்தனர்.

தாத்தா உதயனின் கன்னத்தில் தன்னுடைய உள்ளங்கை வைத்து, பார்வையால் தன் மகிழ்வை காட்டி…

“போயிட்டு வாங்க” என்க, அனைவரும் வழியனுப்பிட அவர்களின் பயணம் துவங்கியது.

திருச்செந்தூர் வந்ததும் அறுபடையானை தம்பதி சமயதேராக வழிபட்டு வணங்கி வீடு வந்தனர்.

விமலா மலர்வாய் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து அமர வைக்க, அப்போதுதான் இலகுவாக நேரம் அமைந்தது.

“அப்புறம் மாம்ஸ்?” என்று ஆர்யன் உதயன் மீது சரிந்தவாறு அருகில் அமர,

“இன்னைக்கு உன் சேட்டையை கொஞ்சம் சுருட்டி வை” என்றார் விஜயன். வேகமாக.

உதயன் சிரித்திட…

“கிரேட் இன்சல்ட்” என்றான் ஆர்யன்.

விமலா இருவருக்கும் பழச்சாறு கொண்டு வந்து கொடுக்க, பருகி முடித்ததும்,

“கூட்டிட்டு போம்மா” என்றார் ராகவன்.

“இருக்கட்டும் தாத்தா” என்று அஷ்மிதா சொல்லிட, நமட்டுச் சிரிப்புடன் அவளை பார்த்தான் உதயன்.

பின்னே, அவளுக்கு உதயன் தாலி கட்டும் வரை கூட இல்லாத பதற்றம், அவனருகில் மிக நெருக்கமாக அமர்ந்திருக்க, அடுத்து என்ன என்பதில் அதீதம் கொண்டிருக்க அவளின் அமைதியிலேயே கண்டு கொண்டவனுக்கு, அவளின் சட்டென்ற பதிலில் சிரிப்புத்தான்.

“மாப்பிள்ளைக்கு டயர்டா இருக்கும் அஷ்மி” என்று ராகவன் சொல்ல,

“நீயும் கொஞ்சம் தூங்கி எழு அஷ்மி… அப்போ தான் நைட் சடங்குக்கு தெளிவா இருப்ப. இப்போவே சோர்ந்து தெரியுற” என்றார் விமலா.

அவர் சொல்லிய தெளிவு என்பதில் அஷ்மிதா உதயனை வேகமாக ஏறிட்டுப் பார்க்க… அவனோ மீசையோடு சேர்த்து உதட்டை கவ்வி சத்தமின்றி பார்வையில் மட்டும் சிரிப்பைக் காட்டியிருந்தான்.

“ம்ம்மா… இன்னும் கொஞ்ச நேரம் தானே! இங்கவே இருக்கோம்” என்று அஷ்மி சிணுங்க, நனியிதழ் அவளின் அவஸ்தை புரிந்தவளாக,

“அஷ்மி எங்க ரூமில் ரெஸ்ட் எடுக்கட்டும் அத்தை… அண்ணா அவங்க ரூம் போகட்டும்” என்றாள்.

“ஹான் இது குட்…” என்ற அஷ்மிதா வேகமாக எழ, உதயன் காட்டிய பாவனையில், “இல்ல… இங்கவே இருக்கேன்” என்று தொப்பென்று அமர்ந்தாள்.

விட்டால் உறங்கிவிடுவாள். இரவு முழுக்க தூங்காதது வேறு அத்தனை சோர்வை கொடுத்தது. அஷ்மியின் வாட்டம் அவளின் முகத்திலேயே தெரிந்தது.

நனியிதழ் தன் அண்ணனை முகம் சுருக்கி கெஞ்சுதலாகப் பார்க்க…

“போ அஷ்மிதா” என்றான் உதயன்.

error: Content is protected !!
Scroll to Top