என் ஆயுள் நீயே 73

என் ஆயுள் நீயே 73

அடுப்பில் பாலினை வைத்துவிட்டு, அது பொங்குவதற்காகக் காத்திருந்த அஷ்மியின் மனம் நிறைந்து காணப்பட்டது.

அவள் எதிர்பார்த்தபடி, அவளது அண்ணன் பெற்றோர் ஸ்தானத்தில் முன்னின்று நடத்தி வைத்த திருமணம்.

அந்தப்பக்கம் உதயனுக்கு இளங்கோ, கங்கா முன்னின்று செய்த அனைத்து சடங்குகளையும், இந்தப்பக்கம் அஷ்மிதாவுக்கு பிரணவ், நனியிதழ் தான் செய்தனர். அதனை விமலாவும், விஜயனும் புன்னகையுடன் பார்த்து நின்றதில் அவளின் நெஞ்சம் குளிர்ந்தது.

பாத பூஜை செய்யும் நொடி, அவளையும் அறியாது ஒற்றைத் துளி கண்ணீர் சூடாய் பிரணவ்வின் பாதம் விழ, அவனின் கை அவளின் உச்சியில் அழுத்தம் கொடுத்த அதே கணம் அவனின் கண்களும் கலங்கி சீரானது.

அனைத்திற்கும் நிறைவாய் அவள் காதல் கொண்டவன் கையால் மாங்கல்யம். சந்தோஷத்தில் அவள் முகம் மின்னிட, பாலும் பொங்கி வழிந்தது.

“அவ்ளோ தான். நான் சக்கரை போட்டு ஆத்தி வைக்கிறேன். நீ போய் சாமி கும்பிட்டு வா” என்று விமலா சொல்ல நிகழ் மீண்டாள்.

ஏற்கனவே ஒருமுறை அஷ்மிதாவின் அறைக்குள் உதயன் வந்திருக்கிறான். ஆனால் இன்று அவ்வறையின் ஒவ்வொரு அடியையும் அத்தனை கூர்மையாக பார்வையால் வலம் வந்தான்.

அவளது புகைப்படங்களுக்கு நடுவே அவனது புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தனர். பிரணவ் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் அடக்கம். இரு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இயல்பாய் இருக்கும் பல படங்கள் இருந்தன. அவற்றிற்கெல்லாம் நடு நாயகமாக, அன்று நிச்சயத்தின் போது இருவரும் காருக்குள் எடுத்துக்கொண்ட சுயமி.

அப்படம் எடுக்கப்பட்ட தருணம் கண் முன் காட்சியாய் விரிந்திட, உதயனின் உதட்டோரம் மென் புன்னகை.

லயித்து நின்றுவிட்டான்.

“எதுவும் வேணுமா மாமா?” பிரணவ் வந்து கேட்க, நிதானமாக பார்வையை விலக்கி, இல்லையென்றான்.

“அஷ்மி பால் காய்ச்ச ஸ்டார்ட் பண்ணியாச்சு. சாமி கும்பிட்டு அனுப்பி வச்சிடுவாங்க” என்று பிரணவ் தானாக சொல்ல…

“நான் கேட்கலையே” என்றான் உதயன்.

“இப்போ வேறென்ன பேச” என்று பிரணவ் சிரிக்க…

“உதைபடுவ… ஓடு” என்றான் உதயன்.

“மே ஐ” என்று ஆர்யன் அறைக்கு வெளியில் நின்று தலையை மட்டும் உள்ளே நுழைக்க,

“அப்படியே… அங்கவே யூ டர்ன் எடுத்துக்கோ” என்றான் உதயன்.

“எதும் டிப்ஸ் மாம்ஸ்… தாத்தாவை அனுப்பி வைக்கவா?” என்று நாணிகோணி கேட்ட ஆர்யன், உதயன் வேட்டியை மடித்துக் கட்டி முன் வைத்த ஒரு அடியில், “ஆத்தீ… நானில்லை” என்று ஓடியிருந்தான்.

“மாம்ஸ்” என்று பிரணவ் சிரிக்க…

“உனக்கு தனியா சொல்லனுமாடா” என்றான் உதயன்.

“இங்க நீ என்னடா பன்ற?” என்று வந்த நனியிதழ், “அண்ணா ட்ரெஸ். குளிச்சிட்டு மாத்திக்கோங்க” என்றவள், கையோடு பிரணவ்வையும் இழுத்துக்கொண்டு சென்றாள்.

“என்னை எதுக்குடி இழுத்திட்டுப் போற…” மனைவியின் இழுப்புக்குச் சென்ற பிரணவ் கேட்க, “அங்க உனக்கு என்னடா வேலை” என்றாள்.

“சும்மா அஷ்மி வரவரைக்கும் பேசிட்டு இருக்க” என்றவன், “இந்த நாள் எனக்கு மட்டும் மாமா அன்னைக்கு பல்பு கொடுத்தார்ல. அதான் எனக்கேதும் சிக்குமா பார்த்தேன்” என்றவன் தலையில் கொட்டிய நனியிதழ், “நானே வந்தனா பிரச்சினை இல்லாம கல்யாணம் நல்லபடியா முடிஞ்ச நிம்மதியில் இருக்கேன். அதை நீ டேமேஜ் பண்ண பாக்குற” என்றாள்.

“நோ… நோ… ஜஸ்ட் ஃபன் பண்ண நினைச்சேன்” என்ற பிரணவ், அஷ்மிதாவை விமலா பூஜையறைக்குள் அழைத்துச் செல்லவும் அங்கு சென்றான்.

இறைவனை வணங்கி, தாய், தந்தை மற்றும் ராகவன் ஆகியோரிடம் ஆசீர்வாதம் பெற்றவள், பிரணவ் அருகில் வர, தன் தோளோடு அணைத்து விடுத்தான்.

“ஹேப்பியா இருக்கணும்டா” என்று பிரணவ் சொல்ல, “ஆமா… அஷ்மி எப்பவும் சிரிச்சிட்டு இருக்கணும்” என்றான் ஆர்யன். அவனின் குரலில் தெரிந்த தழுதழுப்பில், “ச்சூ” என்னதிது என்று அவனை தட்டிக் கொடுத்தாள் நனியிதழ்.

“நீ ரூமுக்கு போடா” என்று சின்ன மகனை விரட்டிய விமலா, “நீ அஷ்மியை கூட்டிட்டுப் போ நனிம்மா” என்றார்.

அனைவரும் தத்தம் அறைக்குள் சென்றிட, நனியிதழ் அஷ்மிதாவை படிகள் முடியும் வரை அழைத்துச் சென்றவள், அணைத்து விடுத்து தனதறை திரும்பியிருந்தாள்.

அஷ்மிதா தன்னுடைய பதற்றத்தை பிடித்திருந்த பால் குவளையின் மீது அழுத்தம் கூட்டி மறைத்தாள்.

“அஷ்மி என்னாச்சு உனக்கு? இது நார்மல். அவங்க உன் உதய். தைரியமா போ” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் கதவை திறந்து உள்ளே செல்ல, உதயன் அறைக்குள் இல்லை.

“எங்க போனாங்க.” பாலினை மேசையில் வைத்துவிட்டு கதவினை தாழிட்டு திரும்பியவள்,

“உதய்” என்றழைக்க…

பால்கனி கதவை திறந்துகொண்டு உள் வந்தான் உதயன்.

“அங்க இருந்தீங்களா?”

“ம்…” என்று அருகில் வந்தவன், “தேடுனியா அஷ்மிதா?” என்றான்.

“அது… அது வந்து” என்று அவள் அவனைப் பார்க்க, “கூப்பிட்டியே… அதான் என்னைத் தேடுனியா கேட்டேன்” என்று மெத்தையில் அமர்ந்தான்.

“ஹான்” என்றவள் அவனை கவனிக்க, முட்டி வரையிலான ஷார்ட்ஸ் மற்றும் டீ ஷர்ட் என்றிருந்தான்.

“அச்சோ..” என வேகமாக திரும்பிக் கொண்டாள்.

“இதுக்கேவா” என்ற உதயன், “தேடும் போது இதுவும் இருக்காதே” என்றான்.

உதயன் கூறிய மறைபொருளில்,

“அச்சோ உதய்” என்று அவனருகில் வந்து அமர்ந்தவள், “பிளீஸ்… இப்படிலாம் பேசாதீங்க” என்றாள்.

“வேறெப்படி பேசணும் அஷ்மிதா” என்ற உதயன் அவளின் கரத்தை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.

மெல்லிய நடுக்கம் அவளது விரல்களில்… சன்னமாக புன்னகைத்துக் கொண்டான்.

“அஷ்மிதா புதுசா இருக்காங்களே!”

“ஆங்… உதய்…” அவள் தடுமாற,

“உதய்கிட்ட அஷ்மிதாவுக்கு தயக்கமா?” எனக் கேட்டான்.

இல்லையென தலையை அசைத்தவள், “ஒரு மாதிரி ஷிவரிங்கா இருக்கு. ஹார்ட் பீட் எனக்கே கேட்குது” என்றாள்.

“அப்படியா… எங்க, எனக்கு கேட்குதா பார்ப்போம்” என்று உதயன் அவளின் இதயத்தில் தன் காது வைத்திட, அவளுக்கு மூச்சே நின்றது.

“உதய்…” என்று கண்கள் மூடியவளின் முகம் மேல்நோக்கி உயர்ந்திருந்தது.

“உதய் கேட்குதே அஷ்மிதா” என்ற உதயன், மெல்ல தன் முகம் உயர்த்தி அவளின் முகம் உரச பார்க்க, இருவரின் தாடையும் ஒட்டி நின்றது.

அவளின் தவிப்புகள் அவனை இம்சிக்க…

ஒற்றை விரலால் அவளின் பிறை நெற்றி வருடி, கன்னம் வழி கோடிழுத்தான்.

“உதய் பிளீஸ்” என்றவள், அவனின் மற்றொரு கரத்தை இறுக்கி பிடிக்க…

மூக்கில்… ஒளிரும் மூக்குத்தியில் முதல் முத்தத்தை முத்தாய் முத்தாய்ப்பாக ஆழ பதித்தான்.

அவள் திணறி துவள,

“சரி சொல்லு” என்றான்.

“என்னது?” எனக் கேட்டு அவள் கண்கள் திறக்க…

“அஷ்மிதாவுக்கு உதய் மேல லவ் வந்த கதை” என்றான்.

“உங்களுக்குத் தெரியாதா?”

அவளும் இயல்பாகியிருந்தாள்.

அவனுக்கு அவளை போதுமென்கிற எண்ணமின்றி கொள்ளையிட பேராசை. ஆனால் அவளின் தயக்கம் அவனுக்குக் கூடாது. தானாக இருத்தல் வேண்டும். அவனை அவள் இயல்பாக தனக்குள் பொருத்திக் கொள்ள வேண்டும். பொறுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக பேச்சினைக் கூட்டினான்.

“தெரியணுமே” என்றான்.

அஷ்மிதாவும் தன் காதலை அவனிடம் சொல்ல வேண்டி காத்திருந்தவளாயிற்றே! அவனிடம் தயக்கமின்றி சொல்லத் துவங்கினாள்.

அப்போது நனியிதழ் மூன்றாம் ஆண்டு. அஷ்மிதா முதல் வருடம். ரீமா மூலமாக, இருவருக்கும் நட்பு ஏற்பட்டிருந்தது.

ரீமா கடலுக்குள் செல்ல வேண்டுமென்று அவளது பிறந்தநாளன்று தன்னுடைய விருப்பமாகக் கேட்க, நனியிதழ் உதயனிடம் கேட்டு ஏற்பாடு செய்திருந்தான்.

“மீன் பிடிக்கிற போட்டெல்லாம் போயாச்சு பட்டு. முக்குளிக்க தான் இப்போ ஆளுங்க கிளம்பிட்டு இருக்காங்க. அதில் போலாம். நடுகடல் வரை போயிட்டு வரலாம்” என்று உதயன் சொல்லியிருக்க, விருப்பமாக கிளம்பி வந்திருந்தனர்.

எப்போதும் நனியை கல்லூரியில் விடுவதற்கு இன்பா வருவதால், அன்றுதான் முதன் முதலாக அஷ்மிதா உதயனை காண்கிறாள்.

போட்டின் உச்சியில் கடலுக்கு பின்னணியில், சூரியக் கதிர்கள் சூழ, வெள்ளை நிற சட்டை அணிந்து உதயன் பின் உருவம் காட்டி நின்றிருக்க…

தரையில் நின்றிருந்த நனியிதழ், “அண்ணா” என்று அழைத்த நொடி திரும்பியவனின் முகம் சூரிய வெளிச்சத்தில் இருளாகத் தெரிந்திட, கூசிய கண்களை அஷ்மிதா தேய்த்துக்கொண்டு பார்க்க, உதயன் கீழிறங்கி வந்திருந்தான். இருள் படர்ந்த காட்சியில் விலகிய உதயன் முகம் செங்கதிரோனுக்கு இணையாக ஒளி கூடி பிரகாசிக்க, அவன் வரவேற்கும் விதமாக இவர்களைப் பார்த்து சிந்திய துளி புன்னகையில் மொத்தமாக வீழ்ந்திருந்தாள் அஷ்மிதா.

“போலாம்” என்று உதயன் அவர்கள் படகிற்குள் இறங்க உதவிட, அப்போது மென்மையாய் உதயன் பற்றிய கரத்தை இறுக்கி மூடி தன் நெஞ்சுக்குள் புதைத்தவளின் பார்வை உதயனையே சுற்றியது.

நனியிதழும், ரீமாவும், கடலின் அழகை ரசித்தபடி பேசிக்கொண்டு வர,

படகின் விளிம்பில் போடப்பட்டிருந்த பலகையின் மீது அமர்ந்திருந்த அஷ்மிதா, அங்கு டிரைவருடன் பேசிக் கொண்டிருந்த உதயன் மீது நிலைத்துவிட, வந்த தூரம் உணரும் முன்பு முத்துக்குளிக்கும் இடம் வந்திருந்தனர்.

உடன் முத்துக்குளிக்க என்று வந்திருந்த ஆட்கள் அதற்கேற்றவாறு தயாராகி ஒருவர் பின் ஒருவராக கடலுக்குள் குதிக்க, அதனை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்த அஷ்மிதாவிடம், அப்போதே கடலில் பிடித்து அங்கேயே சமைத்த மீனை தட்டில் வைத்து நீட்டினான் உதயன்.

அவனைப் பார்த்துக் கொண்டே வாங்கிக்கொண்டவள்,

“ரீமாக்கா” என்றழைக்க, படகின் அந்தப்பக்கம் இருந்தவர்களுக்கு இவளின் அழைப்புக் கேட்கவில்லை.

உதயன் திரும்பி என்னவென்று கேட்க,

“இதில் முள்ளிருக்குமா?” எனக் கேட்டாள்.

உதயன் அவளை புருவம் உயர்த்தி பார்க்க…

“முள் எடுக்கத் தெரியாது. ரீமா அக்கா எடுத்துக் கொடுப்பாங்க. அதான்…” என்று அவள் இறங்கிய குரலில் கூற,

“சாப்பிடத் தெரியுமா?” எனக் கேட்டான் உதயன்.

“ஆங்… நல்லா” என்று வேகமாக சொல்லியவள், உதயன் உதடு மடித்து சிரிப்பினை அடக்கிய விதத்தில், “சாப்பிடுவேன்” என்று முடித்தாள். மெதுவான குரலில்.

“அவங்க அங்க என்ஜாய் பண்றாங்க. டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்” என்ற உதயன் இரு ஸ்பூன் வைத்து கை படாது முள் நீக்கிக் கொடுக்க, அவனின் சிறு அக்கறை, காட்டும் கனிவு, பேசும் மென்மை என அனைத்திலும் தன்னை தொலைத்திருந்தாள்.

அஷ்மிதா சொல்லி முடிக்க… அப்போது தான் அந்த வித்தியாசம் உணர்ந்தாள்.

பேச்சினூடே அவள் அவனின் கை வளைவிற்குள் பாந்தமாகப் பொருந்தியிருந்தாள்.

“உதய்” என்றவள், அவனில் முகம் மறைக்க…

“அப்போவே அஷ்மிதா கண்ணுல தெரிஞ்ச காதலை கவனிக்காம விட்டுட்டேன்” என்ற உதயன், “இப்போ கவனிக்கவா?” என்று அவள் காதில் மெல்லிய ஓசையில் கேட்க, ஏற்கனவே அவனுள் முழுதாகக் கட்டுண்டு இருப்பவள், இப்போது சொல்லவும் வேண்டுமா, தயங்கி அவன் பக்கம் வர தடுமாறியவள் இக்கணம் தானாக அவனை கட்டிக் கொண்டிருந்தாள்.

தானாக அரங்கேறிய உணர்வு பரிமாற்றத்தில், அவனின் இசைவுக்கு ஏற்ப அழகாய் அசைந்து கொடுத்தவளின் மென் முனகல்கள் யாவும் அவனுக்குள் அடங்கிப்போனது. அவளைப்போலவே.

ஆழ்கடலினுள் புதையும் கதிரவன் போல, அஷ்மிதாவினுள் மூழ்கி, தத்தளித்து, தவித்து, கலந்து, கரைந்து கரை உடைத்திருந்தான் உதயன்.

உதயனின் மென்மைகள் யாவும் அஷ்விதாவின் இதயத்தில் அழுத்தமாக தடம் பதித்திட துவண்டு திண்டாடி, அவனுள் தஞ்சம் நுழைந்தவள், மொத்தமாய் அவனுள் களவு புகுந்து, அவனையும் தன்னகத்தே களவாடியிருந்தாள்.

நேசத்தில் கொள்ளை கொண்டவர்கள் இருவராயினும், காதலாய் கொள்ளைப் போனதும் இருவருமே!

அன்பின் ஆழ விதையாய் இரு உள்ளங்களின் பரிமாறல் உடலும், உணர்வுமாய்.

அஷ்மிதாவின் நேசம் கொண்டு கரம் பிடித்தவன் அவளுள் முழுதாய் அடக்கம் கொண்டிருந்தான் உதயச்செல்வன்.

உதயனின் காதலினால் இறுக்கிப் பிடித்த உணர்வுகளை அவனுள் மிச்சமின்றி சேர்பித்திருந்தாள் அஷ்மிதா.

error: Content is protected !!
Scroll to Top