மண்ணின் விலை (சிறுகதை)

தலைப்பு : மண்ணின் விலை
ஆசிரியர் : பிரியதர்ஷினி S

ஒரு மண்ணின் கதை… பல மனிதர்களின் வாழ்க்கை!

“இந்த நிலத்தை விற்றுடலாம் அம்மா!”

தந்தையின் இறுதிச் சடங்குகள் முடிந்து மூன்றாவது நாளே மகன் கார்த்திக் சொன்ன வார்த்தைகள் அவை.

சமையலறையில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த மீனாட்சியின் கைகள் ஒரு நொடி அப்படியே நின்றன.

“என்னடா சொல்ற?”

“இத்தனை பெரிய நிலத்தை வச்சுக்கிட்டு நாம என்ன செய்யப் போறோம்? விவசாயம் பார்க்க ஆளில்லை. அதுவுமில்லாம இப்போ நிலத்துக்கு நல்ல விலை கிடைக்குது. வித்துட்டா நிம்மதியா இருக்கலாம்.”

“உங்கப்பா உயிரோட இருந்திருந்தா இந்த வார்த்தையைச் சொல்லியிருப்பியா?”

“அப்பா வேறம்மா. அவருக்கு விவசாயத்தைத் தவிர வேற எதுவுமே தெரியாது. எனக்கு அப்படியில்ல.”

மகனின் பதிலில் இருந்த அலட்சியம் மீனாட்சியின் மனதை வலிக்கச் செய்தது.

கார்த்திக் வெளிநாட்டில் பணிபுரிபவன். ஆண்டுக்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவான். தந்தை ராமசாமி விவசாயத்திற்காகப்படும் கஷ்டங்களைப் பார்த்து, சிறுவயதிலிருந்தே அந்தத் தொழிலின் மீது அவனுக்கு ஒருவித வெறுப்பு.

மழை பெய்யாதபோது தந்தையின் கவலையையும், விளைச்சல் குறைந்தபோது அவர் அனுபவித்த வேதனையையும் பார்த்து வளர்ந்தவன். அதனால்தான் படித்து முடித்ததும் வெளிநாடு சென்றுவிட்டான்.

ஆனால், ராமசாமிக்கு விவசாயமே உயிர்.

முப்பது ஏக்கர் நிலம். அதில் பெரும்பகுதி நெல் சாகுபடி. மீதமுள்ள நிலத்தில் தென்னை, வாழை, காய்கறிகள் எனப் பல பயிர்கள்.

ஊரிலேயே மதிப்புமிக்க விவசாயி என்ற பெயர் அவருக்கு இருந்தது.

தன்னுடைய மகன் விவசாயத்தைத் தொடர வேண்டும் என்று அவர் ஒருபோதும் கட்டாயப்படுத்தியதில்லை. ஆனால், மகன் ஊருக்கு வரும்போதெல்லாம் ஒரு கேள்வி மட்டும் கேட்பார்.

“சாப்பிட்டியா?”

அந்தக் கேள்விக்குப் பின்னால் இருந்த அன்பையும், அவன் மீது வைத்திருந்த எதிர்பார்ப்பையும் புரிந்துகொள்ளக் கார்த்திக்குக்கு அப்போது நேரமில்லை.

மறுநாள் காலை.

வீட்டின் முன்பாக விலையுயர்ந்த கார் ஒன்று வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கியவர் நகரத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருபவர்.

“வாங்க சார்!” என வரவேற்றான் கார்த்திக்.

“உங்க நிலத்தைப் பத்தி கேள்விப்பட்டேன். மெயின் ரோட்டுக்கு பக்கத்துல இருக்கிறதால நல்ல விலை கிடைக்கும். இந்த மாதிரி இடம் அடிக்கடி கிடைக்காது.”

“எவ்வளவு கொடுக்க முடியும்?”

அவர் ஒரு தொகையைச் சொன்னார்.

கார்த்திக்கின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.

“சரி, ஆவணங்களைப் பார்த்துட்டு முடிவு பண்ணிடலாம்.”

இருவரும் நிலத்தைப் பார்வையிடக் கிளம்பினர்.

நீண்ட தூரம் நடந்த பிறகுதான் வயலின் மறுபுறத்தை அடைய முடிந்தது.

அங்கு சில தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கார்த்திக்கைப் பார்த்ததும் வயதான விவசாயத் தொழிலாளி ஒருவர் அருகில் வந்தார்.

“சின்ன ஐயா வந்துட்டீங்களா?எப்போ வந்தீங்க? பெரிய ஐயா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாரு.”

அவர் குரலில் தெரிந்த பாசம் கார்த்திக்குக்கு வியப்பை அளித்தது.

“நீங்க எத்தனை வருஷமா இங்க வேலை பார்க்கிறீங்க?”

“என் அப்பா காலத்துல இருந்தே இந்த நிலத்துலதான் தம்பி வேலை பார்க்கிறோம். உங்க தாத்தா காலத்துல இருந்து எங்க குடும்பத்துக்கும் இந்த நிலத்துக்கும் தொடர்பு இருக்கு.”

அதைக் கேட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பிரதிநிதி இடையில் புகுந்தார்.

“சரி, இங்க இருக்கிறவங்களுக்கெல்லாம் வேற இடத்துல வேலை கிடைச்சிடும். நீங்க கவலைப்படாதீங்க.”

அந்தத் தொழிலாளியின் முகம் சட்டென்று மாறியது.

கார்த்திக் அதைக் கவனிக்கவில்லை.

அன்று இரவு தந்தையின் அறைக்குச் சென்றவன், மேசையின் மீது இருந்த பழைய மரப்பெட்டியைத் திறந்தான்.

அதில் சில புகைப்படங்கள், நிலத்தின் ஆவணங்கள், பழைய கடிதங்கள் எனப் பல பொருட்கள் இருந்தன.

அவற்றுக்கு நடுவில் ஒரு சிறிய நோட்டுப் புத்தகம் இருந்தது.

முதல் பக்கத்தில் தந்தையின் கையெழுத்து.

‘என் மகன் கார்த்திக்கிற்காக…’

ஆர்வத்துடன் அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டினான்.

ஒவ்வொரு ஆண்டும் செய்யப்பட்ட விவசாயச் செலவுகள், கிடைத்த விளைச்சல், வாங்கிய கடன், செலுத்திய வட்டி என அனைத்தும் முறையாகக் கணக்கிடப்பட்டிருந்தன.

ஆனால், கடைசிப் பக்கங்களில் இருந்த குறிப்புகள் அவனுடைய கவனத்தை ஈர்த்தன.

‘முருகன் – இரண்டு மூட்டை நெல்.’

‘பாண்டியன் – ஒரு மூட்டை நெல்.’

‘மல்லிகா – ஒரு மூட்டை நெல்.’

‘கோவிந்தன் – இரண்டு மூட்டை நெல்.’

ஒவ்வொரு பெயருக்கும் அருகில் தேதிகளும் இருந்தன.

அதற்குக் கீழே தந்தையின் கையெழுத்தில் ஒரு வரி.

‘விளைந்ததில் ஒரு பகுதி நம்முடையது. இன்னொரு பகுதி நம்மை நம்பி வாழ்கிறவர்களுடையது.’

கார்த்திக் புத்தகத்தை மூடினான்.

அப்போது அறைக்குள் வந்த மீனாட்சி, அவன் கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்தாள்.

“அதையெல்லாம் படிச்சியா?”

“அம்மா, இந்தப் பெயர்களெல்லாம் யாரு?”

“நம்ம வயல்ல வேலை பார்க்கிறவங்களும், கஷ்டத்துல இருக்கிற குடும்பங்களும்தான்.”

“அவங்களுக்கெல்லாம் ஏன் நெல் கொடுத்திருக்காரு?”

மீனாட்சி சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.

“ஒரு வருஷம் நம்ம ஊர்ல பெரிய வறட்சி வந்துச்சு. அப்போ பல குடும்பங்களுக்கு உணவுக்கே வழியில்லாமப் போச்சு. அப்போ உங்கப்பா தன்னோட நெல் மூட்டைகளைத் திறந்து எல்லாருக்கும் கொடுத்தாரு.”

“அப்போ அவருக்கு நஷ்டம் வரலையா?”

“வந்துச்சு. இருந்தாலும் கொடுத்தாரு. அதுக்குப் பிறகு ஒவ்வொரு அறுவடையிலும் ஒரு பகுதியை ஏழைக் குடும்பங்களுக்காக ஒதுக்க ஆரம்பிச்சாரு.”

“அதனாலதான் இவ்வளவு வருஷமா லாபம் இல்லாம விவசாயம் பார்த்தாரா?” என்ற மகனை மீனாட்சி நிமிர்ந்துப் பார்த்தாள்.

“உனக்கு உங்கப்பாவை புரிஞ்சுக்கவே முடியாதுடா.”

“என்னம்மா சொல்ற?”

“விவசாயத்துல லாபம் மட்டும்தான் பார்க்கணும்னு உங்கப்பா நினைக்கல. ஆனா, அதுக்காக அவர் நஷ்டத்தை விரும்பினார்னும் அர்த்தமில்ல. உழைக்கிறவனுக்கு நியாயமான விலை கிடைக்கணும். அவன் உழைப்பால நாலு பேருக்குச் சோறு கிடைக்கணும். அதுதான் அவரோட ஆசை.”

மீனாட்சி சேலை தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

“உன்னையும் அப்படித்தான் வளர்க்கணும்னு நினைச்சாரு. ஆனா, நீ அவரைப் புரிஞ்சுக்கவே இல்ல.”

கார்த்திக் எதுவும் பேசவில்லை.

மறுநாள் அதிகாலை.

வழக்கத்திற்கு மாறாகச் சீக்கிரமே எழுந்தவன், தந்தை தினமும் அமர்ந்திருக்கும் திண்ணையில் அமர்ந்தான்.

அப்போது வீட்டின் முன்பாக ஒரு சிறுமி வந்து நின்றாள்.

“பாட்டி… பாட்டி…”

மீனாட்சி வெளியே வந்தாள்.

“என்னம்மா?”

“பாட்டி, தாத்தா எனக்குக் கொடுத்த புத்தகம் வேணும்.”

“என்ன புத்தகம்?”

“படிக்கிற புத்தகம். நான் கல்லூரி வரை படிக்கப் போகணும்னு தாத்தா சொன்னாரு.”

அந்தச் சிறுமியைப் பார்த்த கார்த்திக் எழுந்து வந்தான்.

“உன் பேரென்ன?”

“காவியா.”

“தாத்தா உனக்குப் புத்தகம் வாங்கிக் கொடுத்தாரா?”

“ஆமா அண்ணா. எங்க அப்பா வயல்ல வேலை பார்க்கிறாரு. எனக்கு நல்லா படிக்கணும்னு ஆசை. தாத்தாதான் ஸ்கூல் பீஸ் கட்ட உதவி பண்ணாரு. இந்த வருஷமும் உதவி பண்றேன்னு சொல்லியிருந்தாரு.”

சிறுமி தன்னுடைய புத்தகப் பையைத் திறந்து ஒரு பழைய ரசீதை எடுத்துக் காட்டினாள்.

அதில் ராமசாமியின் கையெழுத்து இருந்தது.

“தாத்தா இனிமே வரமாட்டாரா பாட்டி?”

அந்தக் கேள்வியில் மீனாட்சியின் கண்கள் கலங்கின.

“இல்லம்மா. உங்க தாத்தா இனிமே வரமாட்டாரு.”

“அப்போ என் படிப்புக்கு யார் பணம் கொடுப்பாங்க?”

கார்த்திக் சிறுமியைப் பார்த்தான்.

அந்த ஒரு கேள்வி அவனுக்குள் ஏதோ ஒன்றை உடைத்தது.

தந்தை விளைவித்த நெல், அவருடைய குடும்பத்தின் பசியை மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ குடும்பங்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றியிருக்கிறது என்பதை உணர்ந்தான்.

“நீ கவலைப்படாதே காவியா.”

அவளுடைய தலையை வருடினான்.

“உன்னோட படிப்புச் செலவை நான் பார்த்துக்கிறேன். நீ நல்லா படிச்சு பெரிய ஆளாகணும். அதுதான் உன் தாத்தாவுக்கு நீ கொடுக்கிற பரிசு.”

சிறுமியின் முகம் மலர்ந்தது.

அவள் மகிழ்ச்சியுடன் சென்றதும் கார்த்திக் நீண்ட நேரம் அதே இடத்தில் நின்றிருந்தான்.

மதியத்திற்குள் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பிரதிநிதி மீண்டும் வந்தார்.

“என்ன சார், முடிவு பண்ணிட்டீங்களா?”

“ஹ்ம்ம்.”

“சூப்பர்! எப்போ பத்திரப்பதிவு வச்சுக்கலாம்?”

கார்த்திக் அவரை அழுத்தமாகப் பார்த்தான்.

“இந்த நிலத்தை நான் விற்கப் போறதில்லை” என்றான்.

“என்ன சார் திடீர்னு?” அவர் முகம் மாறியது.

“எனக்குத் தேவைப்பட்ட பணத்தைவிட, இந்த நிலத்தை நம்பி வாழுற மனிதர்கள் அதிகமா இருக்காங்க. அவங்களோட வாழ்க்கையைப் பணத்துக்காக அழிக்க நான் விரும்பல.” அவனது நெஞ்சம் உணர்ந்த ஆத்மத்தின் வெளிப்பாடு.

“சார், இப்போ இருக்கிற விலைக்கு வித்தீங்கன்னா வாழ்க்கை முழுக்க உட்கார்ந்து சாப்பிடலாம்.”

“அதுக்காகத்தான் நான் விற்க விரும்பல. உட்கார்ந்து சாப்பிடுற வாழ்க்கையை என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுக்கல” என்று கார்த்திக் அடர்த்தியாக மொழிய, அவர் கோபத்துடன் அங்கிருந்துச் சென்றார்.

கார்த்திக் தாயிடம் திரும்பினான்.

“அம்மா, அப்பா விட்டுட்டுப் போன விவசாயத்தை நான் தொடரப் போறேன்.”

மீனாட்சியின் முகத்தில் நிம்மதி தெரிந்தது.

“உனக்கு விவசாயம் தெரியுமாடா?”

“தெரியாது. ஆனா, கத்துக்கத் தயாரா இருக்கேன்.”

“அது போதுமே.” மீனாட்சி நெகிழ்ந்திருந்தார் மகனின் முடிவில். விவசாயம் வெறும் தொழில் மட்டுமல்லவே!

“அப்பா என்னென்ன செஞ்சாரோ அதையெல்லாம் அப்படியே செய்யப் போறதில்லை. மண்ணை பரிசோதனை செய்து, தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, விவசாயத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தப்போறேன். அதோட, இங்க வேலை பார்க்கிறவங்களுக்கு நியாயமான கூலி கிடைக்கிற மாதிரியும் பார்த்துக்கப்போறேன்” என்ற மகனை மீனாட்சி மகனை அணைத்துக் கொண்டாள்.

ஆறு மாதங்கள் கடந்திருந்தன.

வயல் மீண்டும் பசுமையாகக் காட்சியளித்தது.

நவீன நீர்ப்பாசன முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. மண் பரிசோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டதால் விளைச்சலும் அதிகரித்திருந்தது.

கார்த்திக் விவசாயத்தைக் கற்றுக்கொள்வதோடு நிற்காமல், அருகிலிருந்த சிறு விவசாயிகளையும் ஒன்றிணைத்து உற்பத்தியாளர் குழு ஒன்றைத் தொடங்கியிருந்தான். விளைந்த பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தான்.

முதல் அறுவடை நாள்.

வயலில் வேலை செய்த அனைவரும் மகிழ்ச்சியுடன் கூடியிருந்தனர்.

அறுவடை செய்யப்பட்ட நெல்லைத் தனித்தனியாகப் பிரித்துக் கொண்டிருந்தபோது, கார்த்திக் ஒரு மூட்டையை மட்டும் ஒதுக்கி வைத்தான்.

“சின்ன ஐயா, இது யாருக்குங்க?” வயதான தொழிலாளி ஒருவர் கேட்டார்.

“இது நம்ம ஊர்ல உணவுக்கு வழியில்லாத குடும்பங்களுக்காக. அப்பா வழக்கமா செஞ்சதைத்தான் நானும் தொடரப் போறேன்” என்றான் கார்த்திக்.

அந்த முதியவரின் கண்களில் நீர் திரண்டது.

“பெரிய ஐயா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாரு தம்பி.”

கார்த்திக் புன்னகைத்தான்.

“அவர் இல்லாமப் போனாலும், அவரோட நல்ல விஷயங்கள் எதுவும் இல்லாமப் போகக்கூடாது.”

அன்று மாலை வீட்டின் முன்பாகத் தந்தையின் புகைப்படத்தை வைத்து விளக்கேற்றினான்.

புகைப்படத்தின் கீழே ஒரு சிறிய வாசகம் எழுதப்பட்டிருந்தது.

‘என் தந்தை எனக்குச் சொத்தாக விட்டுச் சென்றது நிலம். ஆனால், அந்த நிலம் எனக்குக் கற்றுக்கொடுத்தது மனிதம்.’

கார்த்திக் புகைப்படத்தின் முன் நின்றான்.

“அப்பா… நீங்க சம்பாதிச்சது பணம் இல்லப்பா. மனிதர்களோட நம்பிக்கை. நீங்க விட்டுட்டுப்போன மண்ணை மட்டும் நான் காப்பாத்தல. நீங்க வாழ்ந்த வாழ்க்கையையும் காப்பாத்துறேன். நாம விவசாயத்தை காப்பாற்றவில்லை என்றால் பிற்காலத்தில் நம்மை யாரும் காப்பாற்ற முடியாத சூழல் வந்திடும்.” உணர்ந்துக் கூறினான்.

வீசிய மெல்லிய காற்றில் வயலின் நெற்கதிர்கள் ஒன்றோடொன்று உரசிச் சலசலத்தன.

அந்த ஓசையில் தந்தையின் குரல் கேட்பதைப் போல உணர்ந்தான்.

அவன் சிறுவனாக இருந்தபோது தந்தை அடிக்கடி சொல்வார்.

“மண்ணை நம்பி உழைக்கிறவன் ஒருநாளும் ஏமாந்து போகமாட்டான். சில நேரம் விளைச்சல் குறையலாம். வருமானம் குறையலாம். ஆனா, அவன் உழைப்பு இன்னொருத்தனோட வயித்துப் பசியைப் போக்கும்.”

அன்று அந்த வார்த்தைகளின் உண்மையை முழுமையாக உளப்பூர்வமாக உணர்ந்தான் கார்த்திக்.

அவனுடைய கண்கள் வயலின் மீது படிந்தன.

அந்த மண் அவனுக்குச் சொத்தாகத் தெரியவில்லை.

அது பல தலைமுறைகளின் உழைப்பாகவும், பல குடும்பங்களின் வாழ்வாதாரமாகவும், இன்னும் பல குழந்தைகளின் எதிர்காலமாகவும் தெரிந்தது.

நிலத்தின் விலை எவ்வளவு என்று கேட்டவர்களுக்கு அவனால் ஒரு தொகையைச் சொல்ல முடியும். ஆனால், அந்த நிலத்தின் மதிப்பு என்ன என்று கேட்டால்… அவனிடம் பதில் ஒன்றுதான் இருந்தது.

ஒரு கைப்பிடி மண்ணில் ஒரு விவசாயியின் வியர்வை இருக்கிறது. அந்த மண்ணில் விளையும் ஒரு நெல்மணியில் ஓர் ஏழையின் பசியைப் போக்கும் சக்தி இருக்கிறது. நிலத்தை விற்றால் பணம் கிடைக்கும்; ஆனால், அந்த மண்ணோடு இணைந்த மனிதர்களின் வாழ்க்கையை விற்க முடியுமா?

ஒரு நிலத்தின் மதிப்பை அதன் விலையைக் கொண்டு அளவிட முடியாது.

அந்த மண்ணில் விளைந்த உணவால் பசியாறிய வயிறுகளையும், அந்த மண்ணை நம்பி வாழ்ந்த உயிர்களையும் கொண்டே அளவிட வேண்டும்.

மண்ணை விற்றால் பணம் கிடைக்கும். மண்ணைக் காத்தால் பல தலைமுறைகள் வாழும்!

மண்ணின் விலை… இவ்வுலகும் ஈடாகுமோ?

மண்ணின் விலை பணத்தால் நிர்ணயிக்கப்படலாம். ஆனால் மண்ணின் மதிப்பு அதனால் வாழும் மனிதர்களால் நிர்ணயிக்கப்படுகிறது.

திருவள்ளுவர் – திருக்குறள்

உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

பொருள்: பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத்தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி ஆகும்.

error: Content is protected !!
Scroll to Top